விளையும் நன்று - அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச் சிறுவீ ஞாழல் துறையும் இனிது - இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; நங் கானல் ஒன்றே பழியது - இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கருங் கோட்டுப்புன்னை மலரில் தாது அருந்தி இருங்களிப் பிரசம் ஊத - கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; அவர் நெடுந் தேர் இன் ஒலி கேட்டல் அரிது - நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்; எ - று.
(வி - ம்.) வெறுத்தல் - செறிதல். நன்னிமித்தம் - யாம் தேனைப் பருகி மகிழ்தல் போல நீயும் தலைவியினது நலனுகர்ந்து மகிழ்தியென்பது தோன்ற எதிர்வந் தொலித்தல். மழை பெய்தால் மான்கள் காட்டைக் கடந்து நாட்டில் வந்தியங்குவது இயல்பு. அவை எவ்வளவினவாகத் தின்றழித்தாலும் குறைபாடின்றி விளையுமது வென்றவாறு.
'மழையின்றி மாநிலத்தார்க் கில்லை' என்பது ஏனை நிலத்தார்க்கன்றி நெய்தனிலமாக்கள் பெயினும் வறப்பினும் பயன்பெறுவரென்பாள் போலத் தலைமகன் பிரியினும் பிரியாதுறையினும் ஒரு தன்மையான அன்பினன் என்று கூறினாளாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) "விடுமான் உலையின் வெறுப்பத்தோன்றி" என்றும் பாடம். இதற்குக் கொய்யாது விடப்பட்ட குதிரையின் பிடரிமயிர் போன்று செறிந்து தோன்றி எனக்கூறி இருங்கதிர்க்குப் பிடரிமயிர் உவமை என்க.
(311)
திணை : பாலை.
துறை :இது, பொருள்வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.
(து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரியுந் தலைமகன் தன்னெஞ்சினை நெருங்கி 'நெஞ்சமே! அருகில் நாம் முயங்கியுறையுங் கோடை