(வி - ம்.) கடல்மீது நிறைத் திங்கள் எழுந்துழி அக் கடல் நீர் பொங்கி யெழுதல் வெளிப்படை. உவப்பவருதி யென்றதனால் வரைந்து தலைமகள் மகிழுமாறு வருவாயாக வென்றவாறு.
உள்ளுறை:- புன்னைக் கிளையில் வைகிய குருகினம் அதன் மகரந்தம் உதிருமாறு கொம்பை அலைத்தெழுந்து செல்லுஞ் சேர்ப்பனென்றதனால் களவொழுக்க மேற்கொண்டு தலைவிபால் வைகிய நீ அவள் அழுது கண்ணீர் வடிக்குமாறு கையகன்று போயினை; இனி அங்ஙனமின்றி வரைந்து பிரியாது உறைவாயாக வென்றதாம்.
இறைச்சி:-திங்களைக் கண்டு கடல் பொங்கி அலையெழுந்து ஆரவாரிக்கு மென்றது, நீ வரைவொடு வருதல் கண்டு எமர் எதிர்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிப்ப ரென்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம்.
பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) தோடு - கூட்டம். என்னும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. நயந்த - நயந்தவற்றை. இரவுத் தலை - இராப்பொழுதில். மண்டிலம் - திங்கள்.
(375)
திணை :குறிஞ்சி.
துறை :இது, தோழி கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.
(து - ம்.) என்பது, களவின்வழி வந்தொழுகுந் தலைமகன் ஒரு சிறைப் புறமாக வந்திருப்பதை யறிந்த தோழி, தலைமகளை இல்வயிற் செறித்ததை அவன் அறிந்து மணஞ் செய்துகொள்ளுமாற்றானே கிளிகளை நோக்கிக் 'கிளியின் கூட்டமே, அன்னை எம்மை இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே! இனி வெறியு மெடுக்கும் போலும்; இவற்றை எம் காதலனைக் காண்பீரேல் நன்றாக அவனுக்கு அறிவியுங்கோள்' என்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதுவுமது.
| முறஞ்செவி யானைத் தடக்கையில் தடைஇ |
| இறைஞ்சிய குரல பைந்தாள் செந்தினை |
| வரையோன் வண்மை போலப் பலவுடன் |
| கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம் |
5 | குல்லை குளவி கூதளங் குவளை |