(து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்துக் கண்ணே தலைமகனைக் குறை நயப்பித்த தோழி நீட்டியாது வரைந்துகொள்ளுதல் முதலாய காரணங்களைக் கொண்டு தலைமகனுக்கு மறுத்துக் கூறுதலும், அதனை ஆற்றானாகிய தலைமகன் தோழி அறிந்து விரைவிலே தன் குறைமுடிக்கு மாற்றானே 'தலைவியை உள்ளுந்தோறும் அவள் என்னை வினாவி மெலிவிக்கும்; நோய் பெருகாநின்றது; அதுதீர மடலேறாது இறந்துபடேமோ'வென்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மடன்மா கூறும் இடனுமா ருண்டே" (தொல். கள. 11) என்பதனாற் கொள்க.
| மடல்மா ஊர்ந்து மாலை சூடிக் |
| கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும் |
| ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப் |
| பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று |
5 | அதுபிணி ஆக விளியலங் கொல்லோ |
| அகலிரு விசும்பின் அரவுக்குறை படுத்த |
| பசுங்கதிர் மதியத்து அகனிலாப் போல |
| அளகஞ் சேர்ந்த சிறுநுதல் |
| கழறும் மெலிக்கும் நோயா கின்றே. |
(சொ - ள்.) அகல் இரு விசும்பின் அரவுக் குறை படுத்த பசுங் கதிர் மதியத்து அகன் நிலாப் போல - அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல; அளகம் சேர்ந்த சிறு நுதல் - ஒளி வீசுகின்ற கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடையாள்; கழறும் மெலிக்கும் நோய் ஆகின்று - யாம் நினைக்குந்தோறும் எம்மெதிரே தோன்றி எம்மை வினாவி மெலியப் பண்ணாநிற்கும், அதனால் எமக்குக் காமநோய் நனி மிகாநின்றது; மடல் மா ஊர்ந்து மாலை சூடிக் கண் அகல் வைப்பின் நாடும் ஊரும் ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி - அது தீருமாறு பனை மடலாலே செய்த குதிரையேறி நடத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை என்பனவற்றின் மலரை விரவித் தொடுத்த மாலையணிந்து