பக்கம் எண் :


127


நீ அகன்று போவாய்" என்றாலும் அக்காலத்து நம் கொண்கன் நம்மைவிட்டுப் பிரியக் கருதுபவனல்லன், அது கழிந்தது; இனி கானல் ஆயம் அறியினும் ஆனாது அலர்வது அன்று கொல் என்னும் - இப்பொழுதோ எனின் இக்களவொழுக்கம் கானலின்கண் விளையாட்டயர்கின்ற தோழியர் கூட்டம் அறிவதாயினும் அடங்காமல் எங்கே வெளிப்படுமோ? என்று அஞ்சிக் கூறாநிற்பன்; அதனால் அவன் நட்பு புலர்வதுகொல் எனா என் நெஞ்சத்தான் அஞ்சுவல்-ஆதலின் அவனது நட்பு இல்லையாய் விடுமோவென்று என்னெஞ்சத்தில் அஞ்சாநிற்பேன்; எ - று.

     (வி - ம்.) மன் - கழிவு. 'பேணுப. . . . . தக்கென்று' என்றது நம்பால் விரும்பியொழுகுந் தலைமகன் இப்பொழுது அப்படியொழுகவில்லையென்று நான் நினக்குச் சொல்லவருவது எனக்கே வெட்கமுடைத்தென்றவாறு. இது பிறிது மொழிதலணி, அன்னையறியின் ஏதம் பயக்கு மென்றறிந்துவைத்தும் நம்மை நீங்காமை காதல்மிகுதிபற்றி, இப்பொழுது தோழியர் கூட்டம் அறியினும் அஞ்சியகல்வது அக்காதல் குறைந்தமைபற்றி. இனி அவனட்பு அஃகியது போலுமென்றதாம். கேட்டிருந்த தலைமகன் இதனைத் தலைவியறியின் இறந்துபடுமோவென்று பிற்றைஞான்று வரைவொடு புகுவானவது. மெய்ப்பாடு -அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுடன் படுத்தல்.

     (பெரு - ரை.) இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர், "உயிராக்காலத்து உயிர்த்தலும்" (தொல்-கள- 20) என்னும் விதிபற்றித் தலைவி, தலைவனொடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனதாற்றாமையான் தன்னோடும் அவனோடும் பட்டன சிலமாற்றம் தோழிக்குக் கூறியது எனத் தலைவி கூற்றாகக் கொண்டனர்.

     இனி ஆசிரியர் இளம்பூரண அடிகளாரும் தலைவி கூற்றாகவே கொண்டு இதனை "பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற இயல்பின் கண்ணும்" (தொல்-கள- 20) என்புழிக் கூறப்பட்ட எண்வகைத் துறைகளுள் வைத்து அச்சத்தின் அகறல் என்னுந் துறைக்கு எடுத்துக்காட்டினர். "எனினுந் தானெற்பிரிதல் சூழான்" என்பதும் பாடம்.

(72)
  
     திணை : பாலை.

     துறை : இது, செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிந்து போதலையறிந்த தலைவி, அவன் கேட்டுச் செலவழுங்குமாற்றானே தோழியை நோக்கித் "தலைவரோடு முயங்கிக் கிடப்பினும் கொடிய மாலைப்பொழுதில் அஞ்சுகின்ற யான் இங்கே தனிமையிற் றங்கி வாடும்படி அவர் நம்மைக் கைவிட்டு செல்லுகிற்பரெனச் சொல்லுவராதலின் யான் எங்ஙன மாற்றுமே "னென வருந்திக் கூறாநிற்பது,