வெள்ளி வீதியார். (பி-ம்) 1.‘சுரஞ் செல்லியானைக்’: 2.‘மற்றியான்’; 5.‘எமக்குப்’.
(ப-ரை.) ஐய-, யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு -யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், சுரம் செல்யானை -பாலை நிலத்திற் செல்லும் யானையினது, கல் உறு கோட்டின் - மலையைக் குத்திய கொம்பைப் போல, தெற்றென -விரைவாக, இறீஇயர் - முறிவனவாக; எம் உயிர் - எமது உயிர், பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல -பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்கும் பெரு புலவாகி - எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, நும்மும் பெறேஎம் - உம்மையும் யாம் பெறேமாய், இறீஇயர் - அழிக.
(முடிபு) ஐய, யாம் நக்க எயிறு இறீஇயர்; எம் உயிர் எமக்கும் புலவாகி நும்மும் பெறேஎம் இறீஇயர்.
(கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.
(வி-ரை.) தலைவன், “யாம் முன்னொருகால் அன்போடு மகிழ்ந்து பயின்று நகையாடினேமன்றே!” என்று பழமையை நினைவுறுத்தினானாக