பக்கம் எண் :


419


(தலைவன் பிரிந்த காலத்து, “இவள் இறந்து படுவாளோ!” என்றுகவலையுற்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, “தலைவரைப்பிரிந்த துயரினும் இவள் வருந்துதலைக் காணுந்துயர் பெரிதாயிற்று”என்று தலைவி கூறியது.)
 224.    
கவலை யாத்த வவல நீளிடைச் 
    
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா 
    
நோயினு நோயா கின்றே கூவற் 
    
குராலான் படுதுய ரிராவிற் கண்ட 
5
உயர்திணை யூமன் போலத் 
    
துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே. 

என்பது பிரிவிடை இறந்து படுமெனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி(பி-ம். கிழவி) உரைத்தது.

கூவன் மைந்தன்.

     (பி-ம்.) 4. ‘ரிரவிற்’.

     (ப-ரை.) கூவல் குரால் ஆன் படு துயர் - கிணற்றின்கண்ணே வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை, இராவில்கண்ட - இராக்காலத்தில் கண்ட, உயர்திணை ஊமன் போல - ஊமையாக இருப்பவன் அத்துயரத்தை வெளியிட முடியாமல்துன்புற்றது போல, தோழி நோய்க்கு - என் பொருட்டுத்தோழி படும் வருத்தத்தினால், துயர் பொறுக்கல்லேன் - துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்; அத்துயரம், கவலை யாத்த - கவர்த்த வழிகளில் யாமரங்களைஉடைய, அவலம் நீள் இடை - துன்பத்தை உடைய நீண்டவழிகளில், சென்றோர் கொடுமை எற்றி - எம்மைப் பிரிந்துசென்ற தலைவரது கொடுமையை நினைந்து, துஞ்சாநோயினும் - துயிலாமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும்,நோய் ஆகின்று - மிக்க துன்பமாகின்றது.

     (முடிபு) தோழி நோய்க்குத் துயர் பொறுக்கல்லேன்; துஞ்சா நோயினும் நோயாகின்று.

     (கருத்து) தோழி வருந்துதல் பயனற்றது.

     (வி-ரை.) இது முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்கு அறிவுறுத்தியது.

     கவர்த்த வழிகளும் ஆங்கு நேரும் அவலங்களும் நீண்ட வழிகளும் துன்பத்தை மிகுவிப்பன. எற்றல் - நினைத்தல் (குறுந். 145:2; தொல்.உரி. 39) துஞ்சா நோய் - யான் துஞ்சாமைக்குக் காரணமாகிய நோய்.