துயிலினிமை கங்குலுக்கு அடை. பயில் நறுங்கதுப்பிற் பாயலென்றது,பாயலுக்குரிய மென்மையும் மணமும் உடையதென்றபடி. துயிலையும் பாயலையும் நினைத்தனரேல் வந்திருப்பர் என்பது தலைவியின் உள்ளக்கிடக்கை. பாயலும்: உம்மை, உயர்வு சிறப்பு. ஆல், ஏ: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 1. இலையி லஞ்சினை: "இலையில மலர்ந்த வோங்குநிலையிலவம்" (ஐங். 338:2); "இலையில மலர்ந்த முகையி லிலவம்" (அகநா. 11:3.)
3. கோங்கரும்புக்கு நகில்: முருகு. 34-5; சிறுபாண். 25-6; கலி. 56:23-4; அகநா. 240:11; புறநா. 336:9-10; நாலடி. 400; சிறுபஞ்ச. 44; பெருங். 2. 12:100-105; திருச்சிற். 1. 1-3. ஐங். 341-50.
5. கதுப்பிற் பாயல்: "நறுமென் கூந்தன் மெல்லணை யேமே" (குறுந். 270:8); "கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி", "ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும்" (கலி. 71:19, 104:20); "மகளிர், விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து" (பதிற். 50:18-9); தண்ணறுங் கமழ்தொடை வேய்ந்தநின், மண்ணார் கூந்தன் மரீஇயதுயிலே", "தோடார் கூந்தன் மரீஇ யோரே", "இருளைங் கூந்த லின்று யின் மறந்தே", "கூந்தன் மெல்லணைத் துஞ்சி" (அகநா. 223:15-6, 231:15, 233:15, 308:13.)
6. செய்பொருள்: குறுந். 190:2; கலி. 7:21, 12:10, 16:18, 29:24.
7. பிரிந்த தலைவன் தூது விடுத்தல்: குறுந். 266:4; அகநா. 333:22.
(254)
(வினைமேற் சென்ற தலைவன் தன் மாட்டுள்ள அன்பினால் தான் குறித்த இடத்தின்கட் செல்லாமல் இடையே மீள்வன் என்று கவன்ற தலைவியை நோக்கி, "அவர் தாம் செல்லும் பாலை நிலத்தில் யானை தன் சுற்றத்தைப் பாதுகாக்கும் காட்சியைக் கண்டு, நாமும் நம் இல்லறக் கடன் இறுப்பதற்கு நம் முயற்சி முற்றல் வேண்டும் என்று செல்வார்" என்று தோழி கூறியது.) 255. | பொத்தில் காழ வத்த யாஅத்துப் |
| பொரியரை முழுமுத லுருவக் குத்தி |
| மறங்கெழு தடக்கையின் வாங்கி யுயங்குநடைச் |
| சிறுகட் பெருநிரை யுறுபசி தீர்க்கும் |
5 | தடமருப் பியானை கண்டனர் தோழி |
| தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும் |
| காமர் பொருட்பிணிப் போகிய |
| நாம்வெங் காதலர் சென்ற வாறே. |
என்பது இடை நின்று மீள்வர் எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.