(முடிபு) தோழி, நின்னிலை யான் உரைத்தனெனாக, வெற்பன் இஃது ஆகாவாறு நாணினன்; நன்னர் நெஞ்சத்தன்.
(கருத்து) நின்னை வரைந்து கொள்ளுதல் காரணமாகவே தலைவன்பிரிந்தானாதலின் நீ வருந்தற்க.
(வி-ரை.) வாய் திறத்தல் - பாடுதலுமாம். தானே மலரும் பருவத்திற்கு முன் வண்டு மலரைத் திறக்கும் என்றது, களவு வெளிப்பட்டு அலராதலுக்கு முன் வரைந்து கொள்ளும் எண்ணம் உடையான் தலைவன் என்ற குறிப்பினது.
‘யான், நீ ஆற்றூறஞ்சுதலையும் காவன் மிகுதியால் துன்பப்படுதலையும் கூறி வரைவு கடாவினேனாக, இனி இத்தகைய களவொழுக்கம் நிகழாவாறு எண்ணி நாணினான். அதனால் வரை பொருட்குப் பிரிந்தான்' என்றாள். நாணத்தால் நிகழும் காரியம் களவொழுக்கமாகாவாறு செய்வது; இங்கே காரணத்தைக் காரியமாக உபசரித்தாள்.
‘யாம் இதுகாறும் இதனை அறிந்து ஆவன புரிந்திலேமே!' எனத் தலைவன் நாணினன். இதனால் அவன் "வடுப்பரியு நாணுடையான்" (குறள். 502) என்பது போதரும்.
ஒப்புமைப் பகுதி 5. ஏகல் வெற்பு: நற். 116:10; அகநா. 52:5, 177:8; திணை.ஐம்.10; பழ. 68,127.
1-5. வண்டு வாய் திறக்கப் போது மலர்தல்: (குறுந். 260:1-2, 370:1-2); "வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம்" (நற். 238:3.)
6.தலைவன் நன்னர் நெஞ்சத்தன்: குறுந். 259:8.
(265)
(தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழியை நோக்கி, "அவர் வருவார் என்று தெரிவிக்கும் தூது ஒன்றையும் காணேம்" எனக் கூறியது.) 266. | நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன் |
| றின்னா விரவி னின்றுணை யாகிய |
| படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ |
| துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. |
என்பது வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
நக்கீரர். (பி-ம்.) தோழி-, துறத்தல் வல்லியோர் - நம்மைப் பிரிந்து சென்ற வன்மையை உடையோராகிய தலைவர், புள் வாய் தூது - பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நமக்கு ஒன்று உரையார் ஆயினும் - நம்மைப் பொருட்படுத்தி நமக்கு ஒன்றைக் கூறி விடாரானாலும், தமக்கு ஒன்று இன்னா இரவின் - தமக்குப் பொருந்திய இன்னாமையை உடைய இராக