கருவூர்க் கதப்பிள்ளை. (பி-ம்.) 3. ‘சான்றோர் கண்ட’.
(ப-ரை.) தோழி-, காந்தள் அம் கொழு முகை - காந்தளினது அழகிய கொழுவிய அரும்பை, காவல் செல்லாது -தானாக மலரும் வரையில் காத்து நில்லாமல், வண்டு -வண்டுகள், வாய் திறக்கும் பொழுதில் - மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில், பண்டும் தாம் அறி செம்மை சான்றோர்கண்ட - முன்பும் தாம் அறிந்த நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட, கடன் அறிமாக்கள் போல - எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரைப் போல, இடன் விட்டு - இடம் கொடுத்து, இதழ் தளை அவிழ்ந்த - இதழ்கள் பிணிப்பவிழ்ந்த, ஏகல் வெற்பன் - உயர்ச்சியை உடைய மலைகளை உடைய தலைவன், நின் நிலை - நினது நிலையை, யான் தனக்கு உரைத்தனென் ஆக - நான் தனக்குச் சொன்னேனாக, இஃது ஆகாவாறு - இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, நாணினன் - நாணத்தை அடைந்தான்; நன்னர் நெஞ்சத்தன் - அவன் நின்னை வரைந்து கொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.