கருவூர்ச் சேரமான் சாத்தன் (பி-ம். கருவூர்ச் சேரமான் சிரத்தன்.) (பி-ம்.) 2. ‘மருவிரோ’; 4. ‘மேறொடு.’
(ப-ரை.) தோழி , பாம்பின் பையுடை இரு தலை - பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை, துமிக்கும் - துணிக்கும், ஏற்றொடு - இடியொடு கூடிய, நடுநாள் - பாதியிரவு, என்னார் - என்று எண்ணாராகி, வந்து - ஈண்டுப் போந்து. நெடு மெல்பணை தோள் - நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை, அடைந்திசினோர் - அடைந்த தலைவர் பால், சேறிரோ என - செல்கின்றீரோ என்று, செப்பலும் ஆற்றாம் - செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்; வருவிரோ என - சென்றால் மீண்டும் வருவிரோ என்று, வினவலும் வினவாம் - கேட்டலையும் செய்யோம; யாங்கு செய்வாம் - எவ்வாறு செய்வேம்!