பக்கம் எண் :


526


     ஒப்புமைப் பகுதி 1. வைகல் வைகல் வைகுதல்: "வைகலும் வைகல் வரக் கண்டு மஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்" (நாலடி. 39.)

     3. யாண்டுளர் கொல்லோ: குறுந். 176:5, ஒப்பு.

     5. ஆண் புறா பெண் புறாவைப் பயிர்தல்: குறுந். 79:4.

     8. வானுயர் பிறங்கல் மலை: குறுந். 144:7, 253:8.

(285)
  
(தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
 286.    
உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் ் 
    
றமிழ்த மூறுமஞ் செவ்வாய்க் கமழகில் 
    
ஆர நாறு மறல்போற் கூந்தற் 
    
பேரமர் மழைக்கட் கொடிச்சி 
5
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே. 
    

என்பது (1) இரந்து பின்னின்ற கிழவன், குறைமறாமற் கூறியது.

     (2) பாங்கற்குச் சொல்லியதூஉமாம்.

எயிற்றியனார்.

     (பி-ம்.) 1. ‘உள்ளிற’்; 2. ‘றமிர்த’, ‘றமுத’; 3. ‘மழைபோற்’; 4. ‘மழைக்கண் மடந்தை’.

     (ப-ரை.) முள் எயிறு _ முள்ளைப் போன்ற கூரிய பற்களையும், அமிழ்தம் ஊறும் அம் செ வாய் - அமிழ்தம்ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும், கமழ் அகில் - மணம் வீசுகின்ற அகிற் புகையும், ஆரம் - சந்தனப் புகையும், நாறும் - மணக்கின்ற, அறல் போல் கூந்தல் - கருமணலைப் போலக் கரிய கூந்தலையும், பேர் அமர் மழை கண் - பெரிய அமர்ந்த குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய, கொடிச்சி - தலைவியின், மூரல் முறுவலொடு -புன்னகையோடு, மதைஇய நோக்கு - செருக்கின பார்வையை, உள்ளி காண்பென் போல்வல் - நினைத்துப் பார்ப்பேன் போல்வேன்.

     (முடிபு) கொடிச்சியின் மூரன் முறுவலொடு நோக்கினை உள்ளிக்காண்பென் போல்வல்.

     (கருத்து) யான் அளவளாவிய தலைவியை இனிக் காண்டல் அரிதுபோலும்.