(வி-ரை.) பலர் தொழ - கன்னிமகளிரும் பிறருமாகிய பலர் தொழவெனலும் பொருந்தும். செவ்வாய் வானம் - செவ்வானம். ஐயென -விரைய (சீவக. 448, ந.) இன்னம் பிறை பிறந்ததென்றது, ‘தலைவன் என்னைப் பிரிந்திருக்குங் காலத்திலும் எனக்குத் துன்பத்தைத் தரும்பொருட்டுப் பிறந்தது’ என்னும் நினைவிற்று. வெண்ணாரென்பது உலர்ந்தபட்டையை; ஆதலின் கை சுவைத்தது.
பெண்யானையின் வருத்தத்தை நீக்க முயலும் ஆண்யானையைத்தாம் செல்லும் வழியிலே கண்டும், எனது வருத்தத்தை நீக்க முயன்றிலரென்பது தலைவியின் கருத்து. தாம் : அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 1. உடைந்த வளைக்குப் பிறை: “புலவியி லுடைந்த சங்கம் புரிசடைத் திங்கட் கீற்றின், மலைவற விணைக்கு மேல்வை” (கூர்ம. கடவுள். 2); “ஊடலினுடைந்த சங்க மொளிர்சடைப் பிறைவெண் கீற்றின், மாடுறப் பொருத்தும் போழ்து” (திருச்செந்தூர்த் தலபுராணம், கடவுள். 2); குமரகுருபர. 528.
2. ஐயென: அகநா. 305:2; சீவக. 907, 983, 1040, 1205, 2225.
1-3. பிறையைப் பலர் தொழுதல்: (குறுந். 178:5, ஒப்பு.):“தொன்றுதொழு பிறையின்” (மதுரைக். 193.)
7. வெண்ணார்: அகநா. 83:6.
4-7. யானை யாமரத்தின் பட்டையை உரித்துப் பிடிக்குத் தருதல்: குறுந். 37:2-4, ஒப்பு.
யானை யாமரப் பட்டையைச் சுவைத்தல்: “கவைமுறியாஅத்து,நாரரை மருங்கி னீர்வரப் பொளித்துக், களிறுசுவைத் திட்ட கோதுடைத்ததரல்” (அகநா. 257:14-7.)
9. தலைவனது பிரிவால் தலைவி அழுதல்: குறுந். 82:2, ஒப்பு.); “நாமழத் துறந்தன ராயினும்” (அகநா. 205:7.)
(307)
(வரைவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி, “நின் பொருட்டன்றேதலைவன் பிரிந்தான்” என்று தோழி கூறியது.) 308. | சோலை வாழைச் சுரிநுகும் பினைய |
| அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து |
| மயங்குதுய ருற்ற மையல் வேழம் |
| உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர |
5 | ஆமிழி சிலம்பி னரிதுகண் படுக்கும் |
| மாமலை நாடன் கேண்மை |
| காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. |
என்பது வரைவிடைக் கிழத்தியை வன்சொற் சொல்லி வற்புறுத்தியது.
பெருந்தோட் குறுஞ்சாத்தன். (பி-ம்) 1. ‘சுரித்துகும்பிணிய’; 2. ‘யிருந்தலை’.