உறையூர்ச் சல்லியன் குமாரன். (பி-ம்) 2. வாசங் கீழ்ப்ப; 3. நடன வரம்பின் வாடி விடினும், வாடவிடினும்; 7. கின்னா கியபல , 8. வல்லா மாற்றே.
(ப-ரை.) பெரும - தலைவ, நீ எமக்கு இன்னாதனபல செய்யினும் - இன்னாதனவாகிய பல செயல்களைச்செய்தாலும், நின் இன்று அமைதல் வல்லாமாறு - நின்னைஇன்றிப் பொருந்துதற்கு வன்மையில்லாமையின், யாம், கைவினை மாக்கள் - தொழில் புரியும் உழவர், தம் செய்வினை முடிமார் - தமது செய்தொழிலை முடிப்பாராகி,சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்பட - வண்டு உண்ணும்படிமலர்ந்த மலரின் மணம் கீழே படும்படி, நீடின வரம்பின்வாடிய விடினும் - நீண்ட வரப்பிலே வாடும்படி விட்டாலும், கொடியர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது - இவர்கொடியர்; இந்நிலத்தை நீங்கித் தங்குவே மென்றெண்ணாமல், பெயர்த்தும் கடிந்த செறுவில் - மீட்டும் தம்மைநீக்கிய வயலினிடத்தே, பூக்கும் - மலர்கின்ற, நின் ஊர்நெய்தல் அனையேம் - நின் ஊரின்கண் உள்ள நெய்தலைப்போன்ற தன்மையையுடையே மாயினேம்.
(முடிபு) பெரும, நீ எமக்கு இன்னாதன செய்யினும், வல்லாமாறுநெய்தல் அனையேம்.
(கருத்து) நின்னையின்றி அமைந்திருத்தல் எமக்கு இயலாமையின்நீ இன்னாதன செய்யினும் நின்னை ஏற்றுக் கொள்வேம்.