முயக்கத்தையுடைய அகற்சியையுடைய மார்பனே' (கலி. 8:23, 100:21, ந.) ஞெமுங்கத் தழுவுதற்கென ஒரு சொல் வருவிக்க.
ஒப்புமைப் பகுதி 1-2. கமஞ்சூலெழிலி: "கமஞ்சூன் மாமழை" (முருகு. 7; நற். 347: 1; அகநா. 134:2.)
5. பி-ம். இன்னுறல்: அகநா. 399:3.
6. சுரனிறந்தோர் : குறுந். 211:7, 215:7, 260:8.
(314)
("தலைவன் வரைவிடை வைத்துப் பிரியுங்காலத்தில் ஆற்றும்ஆற்றல் உடையையோ?" என்று வினவிய தோழிக்கு, "அவனதுவிருப்பப்படியே ஒழுகும் தன்மையினேனாதலின் ஆற்றுவேன்" என்றுதலைவி கூறியது.) 315 | எழுதரு மதியங் கடற்கண் டாஅங் |
| கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன் |
| ஞாயி றனையன் றோழி |
| நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. |
என்பது வரைவிடை யாற்றகிற்றியோ என்ற (பி-ம். வேறுபடுகின்றாயென்ற) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை வேளாதத்தன் (பி-ம். தும்பிசேர்கீரன்.)
(பி-ம்.) 3. ‘றனையனென் றோழி’.
(ப-ரை.) தோழி--, எழுதரு மதியம் - உதயமாகின்றசந்திரன், கடல் கண்டாஅங்கு - கடலினிடத்தே காணப்பட்டாற் போல, ஒழுகு வெள் அருவி - ஓடிவருகின்றவெள்ளிய அருவியையுடைய, ஓங்கு மலைநாடன் - உயர்ந்தமலைநாட்டையுடைய தலைவன், ஞாயிறு அனையன் - சூரியனைப் போன்றவன்; என்பெரு பணை தோள் - என்பெரிய மூங்கிலைப் போன்ற தோள்கள், நெருஞ்சி அனைய - நெருஞ்சி மலர்களைப் போன்றன.
(முடிபு) தோழி, மலைநாடன் ஞாயிறனையன்; என் தோள் நெருஞ்சியனைய.
(கருத்து) தலைவன் கருதுவதையே யானும் கருதி ஆற்றியிருப்பேன்.
(வி-ரை.) மதியமென்றது இங்கே பிறையை. அருவிக்குப் பிறையும்மலைக்குக் கடலும் உவமைகள். மதியத்தின் நிழல் கார்க்கடலில் நீண்டுதோன்றுதல் அருவியைப் போலும். நெருஞ்சிமலர் ஞாயிற்றையே நோக்கிநிற்கும் இயல்பினது; ஞாயிறு கீழ்த்திசையிருப்பின் கிழக்கு நோக்கியும்மேற்றிசைச் செல்லின் மேற்கு நோக்கியும் உச்சி வானத்திலிருப்பின் உச்சியை நோக்கியும் நிற்பது. ஞாயிற்றை நோக்கிய நெருஞ்சிபோலத் தலைவனை என்தோள் நோக்கி நிற்குமென்றாள்.