பக்கம் எண் :


657


     (வி-ரை.) கொடியோர் நல்காராயினும் என்றது, “வரைவாரோ?வரையாரோ?” என்னும் ஐயத்தை நிகழ்த்திக் கழியுவகை மீதூராமற் செய்தது. யாழ்: அசை நிலை. தொடி வழங்கிறைய என்னும் பாடத்திற்குமெலிவினால் தொடிகளை நழுவ விடும் சந்துகளையுடைய வென்று பொருள் கொள்க; “தொடி நிலை நெகிழச் சாஅய்” (தொல். களவு. 20, ந. மேற்.) என்று வருதல் காண்க.

    தம் தலைவரது மலையைக் கண்டு களித்தல் மகளிர் இயல்பு. உவக்காணாணென்பது ஒட்டிநின்ற இடைச்சொலென்பர் பரிமேலழகர் (குறள். 1185, உரை.) வந்திசின்: சின் முன்னிலை யசைச் சொல்.

    தொய்யல் மாமழை - நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழையெனலும் ஆம் (மலைபடு. 365, ந.) துடங்கலென்னும் பாடத்திற்குப் பொருந்த லென்று பொருள் கொள்க; இச்சொல் துடக்கலென்பதன் தன்வினை.அருவியினாற் கழுவப்பட்ட மலை மண்ணுறு மணியிற் றோன்றியது.

    அருவி மண்ணுறுமணியிற்றோன்றும் என்ற பாடத்திற்கு, அருவியானது கழுவப்பட்ட பளிங்கைப் போலத் தோன்றுமென்று பொருள் கொள்க.

    இரண்டாவது கருத்து: வரைவு நீட்டித்தவிடத்துத் தோழி, “அவர் தண்ணளி செய்யாராயினும் அவரது மலையை நோக்கி ஆற்றுவாயாக” என்று கூறி ஆற்றுவித்தது. இக்கருத்து சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.

     ஒப்புமைப் பகுதி 1. தலைவனைக் கொடியனென்றல்: குறுந். 26:8, ஒப்பு.

     2. உவக்காண்: நற். 237:6, 242:6; துங். 206:1, 207:2; அகநா. 4:13; குறள். 1185.

     5-6. பி-ம். அருவிக்குப் பளிங்கு: குறிஞ்சிப். 57; அகநா. 56:2; புறநா.137:11, 150:27.

     6-7. மலைக்கு மணி: (குறுந். 240:7); “மணியிற் றோன்று, மம்மலை கிழவோன்” (நற். 173:6-7); “மணிநிற மால்வரை”, “மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்” (ஐங். 208:4, 224:2); “மணிநிறங் கொண்ட மலை”,“மணிபுரை மாமலை” (பரி.திரட்டு, 1:9, 74.)

     2-7. தலைவி தலைவனது மலையைப் பார்த்து உவத்தல்: குறுந். 240:6-7, ஒப்பு.

(367)
  
(வரைவுக்குரிய முயற்சிகள் மிகுதியாக நிகழ்தலைத் தோழியால் உணர்ந்த தலைவி, “இதுகாறும் மாமையை இழந்து துன்புற்றேன்; இனிஇடையீடின்றித் தலைவனோடு இன்புறுவேன்” என்று கூறியது.)
 368.    
மெல்லிய லோயே மெல்லிய லோயே 
    
நன்னா ணீத்த பழதீர் மாமை  
    
வன்பி னாற்றுத லல்லது செப்பிற் 
    
சொல்ல கிற்றா மெல்லிய லோயே 
5
சிறியரும் பெரியரும் வாழு மூர்க்கே 
    
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத் 
    
திண்கரைப் பெருமரம் போலத் 
    
தீதி னிலைமை முயங்குகம் பலவே.