(கருத்து) தலைவனோடு அமைந்த தொடர்பு என்றும் கெடாதது.
(வி-ரை.) எல்லை - வரம்பு; முடிவுமாம். வெவ்வாய் - அலர் கூறுதலால் வெம்மையையுடைய வாய்; அவர் கூறும் அலர் நெஞ்சைச் சுடுவதாதலின் இங்ஙனம் கூறினாள். ‘உலகு பிறழ்ந்தாலும் ஊழ்வசத்தால் அமைந்த தொடர்பு கெடாது’ என்றாள். உடைத்தோ: ஓ அசை நிலை. தொடுபு: எச்சத்திரிபு; தொடவென்னும் பொருட்டு.
ஒற்றுமையால், நந்தொடர்பெனக் கூறினாள்.
ஒப்புமைப் பகுதி 1. நிலம் புடை பெயர்தல்: “பெருநிலங் கிளரினும்”,“நிலம்புடை பெயர்வ தாயினும்” (நற். 201:10, 289:2); “நிலந்திறம்பெயருங் காலை யாயினும்” (பதிற். 63:6); “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநா. 34:5); “இருநிலம் பெயரினு மெம்மாட்டில”(பெருங். 1.58:92).
2. கடற்கு முடிவு தோன்றுதல்: “அறந்திருந் துன்னருளும் பிறி தாயி னருமறையின், திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே” (திருச்சிற். 213).
3. வெவ்வாய்ப்பெண்டிர் கௌவை; “வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்” (அகநா. 50:3.)
5. கருவிரலையுடைய ஊகம்: “கருவிரன் மந்தி” (மலைபடு. 311; ஐங். 272:1, 280:1).
4-5. ஊகத்தின் மயிர்: (குறுந். 90:3-4); “குருமயிர்க் கடுவன்” (ஐங். 275:1). பூநாறு பலவுக்கனி: குறுந். 90:4.
5-6. பலாப்பழத்தைக் குரங்கு தோண்டுதல்: குறுந். 342:1, ஒப்பு.
7. காந்தளஞ் சிறுகுடி: அகநா. 315:5. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.
மு. குறுந். 170.
(373)
(தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக் கொண்டாராக, “யான் அறத்தொடு நிற்றலின் இது நிகழ்ந்தது” என்று தோழி தலைவிக்குக் கூறியது). 374. | எந்தையும் யாயு முணரக் காட்டி |
| ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் |
| மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப |
| நன்றுபுரி கொள்கையி னொன்றா கின்றே |
5 | முடங்க லிறைய தூங்கணங் குரீஇ |
| நீடிரும் பெண்ணைத் தொடுத்த |
| கூடினு மயங்கிய மைய லூரே. |
என்பது அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.