படுமரத்து மோசிக் கொற்றன் (பி-ம். படுமாற்றூர் மோசிகீரன் கொற்றனார், படுமரத்து மோகிக் கொற்றன், படுமாத்து மோசிக் கொற்றன்). (பி-ம்.) 2. ‘தாஅங்’; 5. ‘பொலிந்த’.
(ப-ரை.) நெஞ்சே, மன் உயிர் அறியா - நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத, துன் அரு பொதியில் - அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள, சூர்உடை அடுக்கத்து - தெய்வங்களையுடைய பக்கத்தில்வளர்ந்த, ஆரம் கடுப்ப - சந்தனத்தைப்போல, வேனிலானே - வேனிற்காலத்தில், தண்ணியள் - இத்தலைவி குளிர்ச்சியையுடையாள், பனி - பனிக்காலத்தில், வாங்கு கதிர் - அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள், தொகுப்ப - மறைய,கூம்பி - குவிந்து, ஐயென - அழகிதாக, அலங்கு வெயில் - அசைகின்ற வெயிலை, பொதிந்த தாமரை - உட்பொதிந்ததாமரை மலரின், உள் அகத்து அன்ன - உள்ளிடத்தைப்போன்ற, சிறு வெம்மையள் - சிறிய வெம்மையை உடையாள்.