(தலைவனது பிரிவைத் தலைவிக்கு உணர்த்திய தோழி, “உலகிலுள்ள மகளிர் தம் தலைவர் வினைமுடித்து வருமளவும் ஆற்றியிருப்பார்” என்று உலகின்மேல் வைத்துக்கூறி, “நீ ஆற்றல் வேண்டும்” என்பதை அறிவுறுத்தினாளாக, “நம்மை அறிவுறுத்துவாரையன்றி நம்துயரைப் போக்குவாரைக் கண்டிலேம்” என்று தலைவி கூறியது.)
398.
தேற்றா மன்றே தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
5
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.
என்பது பிரிவுணர்த்திய தோழி, தலைமகன் பிரிந்து வினைமுடித்து வருந் துணையும் ஆற்றியுளராவரென்று உலகின்மேல் (பி-ம். உலகியல்மேல்)வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.