ஆயத்தைப் பிரியத் துணிந்தாள்!’ என்று செவிலி இரங்கினாள்; தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கியபடி.
பாலும்: உம்மை உயர்வு சிறப்பு. பந்துடன் - பந்தை; உருபு மயக்கம். கொல்: ஐயம்; ஓ: இரங்கற் குறிப்பு.
ஓமையின் பட்டையைக் குத்தி அதிலுள்ள நீரையுண்ண எண்ணியயானை அஃது உலர்ந்திருந்தமையின் வருந்தி, இடியின் ஒலியைக்கேட்டு, ‘மழை பெய்யும் போலும்’ என்று அலந்து நின்றது. யானையின்நிலை, ஓமையின் சினை, கழைதிரங்கினமை ஆகிய யாவும் பாலையில் வேனிற்றன்மை நிலைபெற்றதை வெளிப்படுத்தின.
வேனிற் குன்றத்தென்று பாலையைக் கூறினள், குறிஞ்சி திரிந்த பாலையாதலின். வெவ்வறைக் கவானென்ற பாடத்திற்கு வெம்மையையுடைய மலைக்கவானென்று பொருள் கொள்க.
அவன் - தலைவன்; நெஞ்சறி சுட்டு.
ஏகாரங்கள் அசை நிலைகள்.
இதனை நற்றாய் கூற்றாகவும் கொள்ளுதல் பொருந்தும்.
ஒப்புமைப் பகுதி 1. தலைவி பால் உண்ணாமை: அகநா. 48:2, 89:20.தலைவி பந்தினை விரும்புதல்: அகநா. 49:1.
3-4. முளிசினை ஓமை: குறுந். 388:5. யானையும் ஓமையும்: (குறுந். 79: 1-2, ஒப்பு.); "கடும்பகட் டொருத்த னடுங்கக் குத்திப், போழ்புண் படுத்த பொரியரை யோமை" (அகநா. 397: 10-11.)
6. மழைக்குரல்: குறுந். 94:7.
7. கழைதிரங்காரிடை: குறுந். 331:1, ஒப்பு.
(396)
(வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரியப்புக்க தலைவனைநோக்கி, “தலைவி நின் தண்ணளியால் வாழும் நிலையினள்; ஆதலின் விரைவில் மீண்டு வருவாயாக” என்பதுபடத் தோழி சொல்லியது.) 397. | நனைமுதிர் ஞாழற் சினைமரு டிரள்வீ |
| நெய்தன் மாமலர்ப் பெய்தல் போல |
| ஊதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப |
| தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் |
5 | டன்னா வென்னுங் குழவி போல |
| இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும் |
| நின்வரைப் பினளென் றோழி |
| தன்னுறு விழுமங் களைஞரோ விலளே. |
என்பது வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.