கோவதத்தன் (பி-ம். கோவத்தன்). (பி-ம்.) 1. மடவை; 4. கொடியிணர் பூத்த; 5.வம்பு.
(ப-ரை.) கல் பிறங்கு அத்தம் சென்றோர் - கற்கள் விளங்கும் பாலைநிலத்து அருவழியைக் கடந்து சென்ற தலைவர், கூறிய - மீண்டு வருவேனென்று சுட்டிக் கூறிய பருவம் - கார்ப்பருவம், வாரா அளவை - வாராத காலத்திலே, வம்ப மாரியை - பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் என கார் என - கார் காலத்து மழையென்று, மதித்து - கருதி, நெரிதர - நெருங்கும்படி, கொம்புசேர் கொடி இணர் ஊழ்த்த - சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்களைப் புறப்பட விட்டன; ஆதலின், தடவு நிலை கொன்றை - பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள், மன்ற - நிச்சயமாக, மடவ - பேதைமையையுடைய.