பக்கம் எண் :


141


    கள்ளியங்காடு: அம், சாரியை. ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.

    உள்ளார் கொல்லென்றது நினைத்தால் வந்திருப்பரென்னும் நினைவிற்று.

    ஒப்புமைப் பகுதி 1. உள்ளார் கொல்லோ தோழி: குறுந். 16:1, ஒப்பு. 1-2. கிளியின் வளைந்த வாய்: "வளைவாய்ச் சிறுகிளி" (குறுந். 141:1); "கிளிவா யொப்பின்" (குறுந். 240:2); "வளைவாய் கிள்ளை" (பெரும் பாண். 300).

    3-4. காசை நாணிற் கோத்தல்: "நாண்வழிக் காசு போலவும்" (இறை.2, உரை).

    1-5. கள்ளியங் காடிறந்தோர் உள்ளார் கொல்: குறுந். 16:1-6.

(67)
  
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்றது.)
 68.   
பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின் 
    
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும் 
    
அரும்பனி யச்சிரந் தீர்க்கும் 
    
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே. 

என்பது பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது.

அள்ளூர் நன்முல்லை.

    (பி-ம்) 3.அரும்பனியற்சிரம்.

    (ப-ரை.) பூழ் கால் அன்ன - குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற, செ கால் உழுந்தின் - செவ்விய காலையுடைய உழுந்தினது, ஊழ்ப்படு முதுகாய் - மிக முதிர்ந்த காய்களை, உழை இனம் கவரும் - மான்கூட்டங்கள் தின்னும்பொருட்டுக் கொள்ளும், அருபனி - பொறுத்தற்கரிய பனியையுடைய, அச்சிரம் தீர்க்கும் - முன்பனுக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும், மருந்து - பரிகாரம் அவர் மணந்த மார்பே - என்னை மணந்த அவருடைய மார்பேயாகும்; பிறிது இல்லை - வேறு இல்லை.

    (முடிபு) அச்சிரந் தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே; பிறிதில்லை.

    (கருத்து) அவர் உடன் இராமையால் இம் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.

    (வி-ரை.) உழுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்த அடிக்குப் பூழ்க்கால் உவமை. அச்சிரம் - முன்பனிக்காலம் (பரி. 18:38; சிலப். 14:105);