இஃது அற்சிரமெனவும் வழங்கும். உழுந்து பயறு முதலியன முன்பனிப் பருவத்தில் முதிர்வன; "இரும்பனிப் பருவத்த மயிர்க்கா யுழுந்து" (நற். 89:5); "பற்றுவிடு விரலிற் பயறுகா யூழ்ப்ப, அற்சிர நின்றன்றாற் பொழுதே" (அகநா. 339: 4-5). அச்சிரம்: ஆகுபெயர். மருந்து - பரிகாரம்; "மருந்தில் கூற்றம்" (புறநா. 3:12, உரை). அவர்: தலைவர்; நெஞ்சறி சுட்டு. அம்மார்பு மருந்தாதலை முன்னர் அறிந்தேனென்பாள் 'மணந்த மார்பு' என்றாள். மார்பே: ஏகாரம் பிரிநிலை.
ஒப்புமைப் பகுதி 1. நற். 89:5.
3.அரும்பனி யச்சிரம்: (குறுந். 76:6, 82:6, 277:4, 338:5); "கடும் பனியற்சிரம்" (நற். 86:4); "அரும்பனி யளைஇய வற்சிரக் காலை" (ஐங். 470:2).
தலைவரைப் பிரிந்திருப்போர் அச்சிரத்தால் துன்புறல்: (குறுந். 76:6); "காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும், தண்பனி வடந்தை யச்சிரம்" (ஐங். 223:3-4); "வாடை தூக்கும் வருபனியற்சிரம், நம்மில் புலம்பிற் றம்மூர்த் தமியர், என்னா குவர்கொ லளியர்", "தண்பனி யற்சிரந் தமியோர்க் கரிதென", "அற்சிரத் தூதை தூற்றப், பனியலைக் கலங்கிய நெஞ்சமொடு, வருத்துவ மல்லமோ பிரிந்திசினோர் திறத்தே", "அகன்றுறை மகளி ரணி துறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று" (அகநா. 78:10-12, 178:19, 183:13-5, 217:12-3).
4. மருந்து பிறிதில்லை: நற். 80:9, 140:11, 247:9; கலித்.60:21; அகநா. 147:14.
தலைவன் மார்பு தலைவிக்கு இன்பம் பயத்தல்: (குறுந். 73:1, 80:7, 247:6-7, 248:1-2, 339:3-5) "மகிழ்நன் மார்பிற்றுஞ்சி", "மார்பு றப்படுத்தல்" (நற். 20:2, 171:11); "கழனி யூரன் மார்பு, பழன மாகற்க", "ஊரன் மார்பே, பனித்துயில் செய்யு மின்சா யற்றே" (ஐங். 4:5-6, 14:3-4).
(68)
(இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.) 69. | கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக் |
| கைம்மை யுய்யாக் காமர் மந்தி |
| கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி |
| ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் |
5 | சார னாட நடுநாள் |
| வாரல் வாழியோ வருந்துதும் யாமே. |
என்பது தோழி, இரவுக்குறி மறுத்தது.
1கடுந்தோட் கரவீரன். 1. | இதனைக் 'கடுந்தோட்காவீரன்' என்று படித்தற்கும் இடம் உண்டு. |