புலி கவான் மரையா தொலைச்சி உண் துறந்த கடுமுடை எனவும், பேடைக்கு இரை தரீஇய எழுந்த எருவை கடுமுடை கவரும் அத்தம் எனவும் இயையும். (வி - ரை.) மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது. உயரத்தால் ஏறவொண்ணாமை பற்றிக் கடியுடை நனந்தலை யென்றார். ஈன்ற பேடை பிறிதிடத்திற் செல்லலாகாமையின் ‘இளைப்பட்ட’ என்று கூறப்பட்டது. பின்னரும் ‘பருந்திளைப் படூஉம்1 என இங்ஙனம் வருதல் காண்க. இளைப்பட்ட-வலைப்பட்ட என்பாருமுளர். அல்கு பொழுது உண்ணும் இரை யென்றும் கூறுதலும் பொருந்தும். மலையை வென்ற வெற்றியை யுடைய மலை எனலுமாம். கவான் - பக்கமலை. மரை ஆ - ஒருவகை மான். புலி பிற விலங்கினை வல பக்கத்தே வீழ்த்தி உண்ணும் இயல்பின தென்பது சான்றோர் செய்யுட்கள் பலவற்றான் அறியப்படுவது. உவறி - இஃது ஊற்றி என மருவி வழங்குகன்றது. நிறைந்து எனப் பொருள்படும் ஆர்ந்து என்பது அருந்துபு என்றாயிற்று. கலவு - மூட்டுவாய். முடை: ஆகு பெயர். மராஅ - ஆச்சாமரம்; மராஅம் எனப் பிரித்து வெண்கடம்பு எனலுமாம். நெஞ்சம்: அண்மைவிளி. ‘நின்வாய்’ என்றது நெஞ்சினை உறுப்புடையது போலவும், வாய்ோற் பொய்ம்மொழி என்றதனால் முன் மறுத்தமை கூறுதலின், மறுத்துரைப்பது போலவும் கூறினார். இது ‘நோயு மின்பமும்’2 என்னும் சூத்திரத்து ‘உறுப்புடையது போல் உணர்வுடையதுபோல் - மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்’ எனவும் போந்த வழுவமைதியால்; பின்னரும் ஆண்டாண்டு இங்ஙனம் வருதல் இவ் விதியின்பாற்படும் என்க. செவ்வாய் முதலியன விலங்கும் என்றது, முன் தலைவியின் உரு வெளிப்பட்டுத் தடுத்தமை கருதியாகும். களையுமாறு என்பது களைமா எனத் திரிந்தது. குழைக்கு-குழையொடு: வேற்றுமை மயக்கம். (மே - ள்.) இச் செய்யுளில் ‘பின்னின்று....களைமா’ என்பதனை, மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல் பற்றிக் கூறியது என்றார், நச். ‘இன்பத்தை வெறுத்தல்’3 என்னுஞ் சூத்திர வுரையில், எதிர் பெய்து பரிதல் என்பதற்கு ‘அந்தீங் கிளவி...ஞான்றே’ என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா.
1. அகம்: 21. 2. தொல் பொருளியல்: 2. 3. தொல். மெய்ப்: 22. |