பக்கம் எண் :

182அகநானூறு

ஆகிய, சுரியல் அம் பொருநனை - குழன்ற மயிரினையுடைய அழகிய குளிர்ந்த காவிரி தன் திரைக்கையால் வௌவிக் கொண்டமைபோல, கொண்டு கை வலித்தல் - சூளினை மேற்கொண்டு கையாற் பற்றிக் கோடலை, யான் சூழ்ந்திசின் - யான் எண்ணியுளேன்.

(முடிபு) ஊரன், யாங்கன் முழவொடு தூங்க, எம் சேரி வந்தென, அவன் பெண்டிர் பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப; ஆதிமந்தி பொருநனைக் காண்டிரோ எனப் பேதுற்று இனைய, குணக்கு ஒழுகும் காவிரிபோலச் சூன்மேற் கொண்டு கைவலித்தலை யான் சூழந்திசின்.

(வி - ரை.) கனைதல் - செறிதல்; ஒலித்தல் எனக் கொண்டு, மார்ச்சினை யமைந்து ஒலிக்கும் எனலுமாம். தூங்கல் - ஆடுதல். பெண்டிர் என்றது தலைமகளை.

அந்தில்: அசை. கச்சினன் கழலினன் மார்பினன் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப் பொருநன் என்னும் பெயர்கொண்டு முடிந்தன. பொருநன்-ஆட்டனத்தி. இதனை, 1'ஆட்டனத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த, ஆதிமந்தி’ என்பதனானறிக.

உரைஇ - பரந்து. காவிரிபோல - காவிரி தன் திரைக்கையால் வௌவிக் கொண்டமைபோல: இது தொழிலுவமம்.

ஆடற் றகையானாதல் பாடற்குரலானாதல், பெற்றேனென்று சொல்லுவா ளாயின், யான் இப்படிச் செய்வேன் என்றாள்.

(மே - ள்.) 2'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’ என்னுஞ் சூத்திரத்த, இச் செய்யுள், தலைவனின் காமக் கிழத்தியாய இளமைப் பருவத்தாளொருத்தி, தன்பாற் றலைவன் வருவது பற்றித் தலைவி புலந்ததாகக் கேட்டவழி்பெருமிதம் கொண்டு கூறியதாகும் என்பர் நச்.


1. அகம்: 222.

2. தொல். கற்பு: 10.