| செங்கேழ் மென்கொடி ஆழி அறப்ப | | 10. | இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ மின்னலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன் தண்நறும் பைந்தா துறைக்கும் புன்னையங் கானல் பகல்வந் தீமே. | | -1மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார். |
(சொ - ள்.) 3. தண் கடற் சேர்ப்ப - குளிர்ந்த கடற்கரையை யுடைய தலைவனே! நீ; 1-2. கொடுந் தாள் முதலையொடு கோமீன் வழங்கும்-வளைந்த காலினையுடைய முதலையொடு சுறாமீன் இயங்கும், இருங்கழி இட்டுச்சுரம் நீந்தி-கரிய உப்பங் கழியாய நெருங்கிய அரிய வழியினைக் கடந்து, இரவில் வந்தோய்-இரவின்கண் வந்துளாய்; 7-13. முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை - நீர்முள்ளி தழைத்த கடலையடைந்த கரையிலுள்ள, ஒண் பல் மலர கவட்டிலை அடும்பின் - ஒள்ளிய பலவாய மலர்களையுடையகவடுபட்ட இலைகளையுடைய அடம்பினது, செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப - சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை (நின்) தேருரு அறுத்துவர, இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ -மணிகளைப் பூண்ட ஓரினமாகிய கதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்தி, மின் இலைப் பொலிந்த விளங்க இணர்-ஒளியையுடைய இலையொடு பொலிந்த விளங்கும் பூங்கொத்துக்கள், அவிழ் பொன் தண் நறும் பைந்தாது உறைக்கும் - மலர்ந்த பொன்போலும் தண்ணிய நறிய செவ்வித் தாதுகக்ளைச் சொரியும், புன்னை அம் கானல் பகல் வந்தீமே - புன்னை மரங்களையுடைய அழகிய கடற்கரைச் சோலையில் பகலில் வருவாயாக; 4-6. எந்தை - எம் தந்தை, புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த-பொருந்தும் அலைகளையுடைய கடலகத்தே தழவிக் கொணர்ந்த, பல்மீன் உணங்கல் படுபுள் ஒப்புதும்-பலவகை மீன்களின் வற்றலிற் பொருந்தும் புட்களை ஒட்டியிருப்பேம்; ஆகலின்; 4. யாம் நினக்கு எவன் அரியம் - யாங்கள் நினக்கு எங்ஙனம் அரியமாவேம்? (முடிபு) சேர்ப்ப இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவில் வந்தேய், நெடுந்தேர் கடைஇ, புன்னையங் கானல் பகல் வந்தீமே; மீன் உணங்கல் படுபுள் ஒப்புதும்; யாம் நினக்கு எவன் அரியம்? (வி - ரை.) கோட்டு மீன் - கொம்பையுடைய மீன்; சுறாமீன். இட்டுச் சுரம் - வழி சிறிதாகிய சுரம். நெறியருமை கூறியவாறு. மலர அடும்பு எனக் கூட்டுக.
(பாடம்) 1. நக்கீரர். |