பக்கம் எண் :

13

(பி - ம்.) 10 ‘களிறே’ 14 ‘பொலிவொடு’

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை.

சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியது.

(இ - ள்.) வாள் வெற்றியைத் தருதலாற் குருதிக்கறைபட்டன, செக்கர் வானத்தினது அழகையொத்தன; கால்புடை பெயர்ந்துபோர் செய்து களத்தைத் தமதாக்கிக்கொள்ளுதலால் வீரக்கழல் 1அருப்புத்தொழில் பறைந்தவை, கொல்லும் ஆனேற்றினதுகோட்டையொத்தன; பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளைதோன்றுவன, நிலையிற் றப்பாத இலக்கத்தையொத்தன; குதிரைகள் எதிரியை எறியும் காலமுடையான் 2இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை உடைமையான் மான்முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்வி உதிரம் 3உவற்றியுண்ட புலியை யொத்தன; களிறுகள், கதவை முறித்து வெகுண்டு உலாவி நுனைதேய்ந்த வெளியகோட்டையுடைமையான் உயிரையுண்ணும் கூற்றையொத்தன; நீதான், அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்பட்ட பொற்றேரின்மேலே பொலிவொடு தோன்றுதலாற் கரிய கடலின்கண்ணே ஓங்கியெழுகின்ற செய்ய ஞாயிற்றினது ஒளியையுடையை; அத்தன்மையையாதலால், தாயில்லாத உண்ணாக் குழவிபோல ஒழியாது கூப்பிடும் நின்னைச் சினப்பித்தவருடைய நாடு - எ - று.

நாடென்றது (19) நாட்டுள் வாழ்வாரை. மாறென்பது (17) ஏதுப் பொருள்படுவதோர் இடைச்சொல்.

கழல்பரிந்தன (3) வென்றோதி, வீரக்கழல் நீங்கியவையென்று உரைப்பாருமளர்.

வாளாகிய மறுப்பட்டவை (1) யெனவும், கழலாகிய பறைந்தவையெனவும் (3) தோலாகிய துளைதோன்றுவ (5) வெனவும் கொள்க.

துவைத்துத் தோன்றுவவென இயையும்.எறிபதத்தா (7) னென்பதற்கு 4ஒத்தும் காலையுடையானென்று உரைப்பாருமுளர்.

செஞ்ஞாயிற்றுக் கவினை (16) யென்றதுணையும் மன்னவன் புகழும், ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடென (19) ஒன்னார் நாடழிபிரங்கலு மோதலான், இது கொற்றவள்ளை (பு. வெ. 43) ஞாயிற்று.


1. அருப்புத்தொழில் : கலித். 104 : 23, ந.

2. ‘இடவாய்வலவாயாகிய இடம்’ (கலித். 140 : 14, ந.)

3. உவற்றி - ஊற்றி; ‘‘ஒண்செங்குருதியுவற்றியுண்டருந்துபு, புலவுப்பலி துறந்த கலவுக்கழி கடுமுடை” (அகநா. 3)

4. ஒத்துதல் - அழுத்தல்; ‘‘ஒத்துந் தாளத் தொக்கத் தத்தித், தத்தும் பரிதன்றான் வைத்ததுவே” (திருவால. 28 : 53)