பக்கம் எண் :

2

ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை, திருநுதற்கு (பி - ம். திருநுதலது) அழகாயது. அப்பிறைதான் பெரியோன் சூடுதலால், பதினெண் கணங்களாலும் புகழவும்படும்; எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய, நீர் தொலைவறியாக் குண்டிகையானும் தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடையோனுக்கு - என்றவாறு.

தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்குமென்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையுமென்று உரைப்பினும் அமையும்.

நீரறவறியாக் கரகம் - கங்கையென்பாருமுளர்.

அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்ற எழுவாய்கட்கு நுவலவும்படும், கரக்கினுங்கரக்கும், ஏத்தவும்படும் என நின்ற பயனிலைகளை நிரலே கொடுக்க. இவ்வெழுவாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோற்கென்னும் நான்காவதனோடு முடிக்க.

ஏமமாகிய (11) அருந்தவத்தோ (13) னென்க; 1 ஏமமாகிய நீரெனினும் அமையும்.

அணியலுமணிந்தன்றென்பது, ‘‘உண்ணலு முண்ணேன்” (கலித். 23) என்பது போல நின்றது.

பதினெண்கணங்களாவார் : தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் பூதமும் வேதாளமும் தாராகணமும் ஆகாசவாசிகளும் போக பூமியோருமென இவர்; 2 பிறவாறும் உரைப்பர்.

இப்பெரியோனை மனமொழி மெய்களான் வணங்க அறமுதல் நான்கும் பயக்கு மென்பது கருத்தாகக் கொள்க.

(குறிப்புரை) 1. கண்ணி - ஆடவர் தலையிற் சூடுதற்குரிய மாலை; ‘‘பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்” (முருகு. 44) ; கார் நறுங் கொன்றை: ‘‘காரினார் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்”, ‘‘கார்க் கொன்றை மாலை கலந்த துண்டோ” (தே.) ; கொன்றைமாலை சிவபெருமானது அடையாள மாலை என்பர்; கலித். 150 : 1.; சீவக. 208, ந.
2. தார் - மார்பிலணியுமாலை; ‘‘மார்பொடு விளங்க வொருகை, தாரொடு பொலிய வொருகை” (முருகு. 112 - 3) ; ‘‘பொலந்தார் மார்பினெடியோன்” (மதுரைக். 61) ; ‘‘புனைதார்ப் பொலிந்த வண்டுபடுமார்பின்” (மலைபடு. 56)

1 - 2. ‘‘கார்விரி, கொன்றைப் பொன்னேர் புதுமலர்த், தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்” (அகநா. கடவுள்.)


1. ‘ஏமமாகிய நீர்’ என்றது ‘‘நீரின்றமையாதுலகு” (குறள், 20) என்பது கருதி.

2. முருகு. 168, ந.; பிங்கலம், 92; தக்க. 136, உரை.