பக்கம் எண் :

239

(கு - ரை.) 1. "துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல், இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்" (மலைபடு. 463 - 4) . நாண்மகிழ் : புறநா. 29 : 5, குறிப்புரை.

2. ஈதல்லே : விகாரத்தால் லகரவொற்று விரிந்தது.

4. இழையணிதேர் : புறநா. 359 : 15; குறுந். 345 : 1; கலித். 99 : 7. தேர்தருதல் ; புறநா. 114 : 6, குறிப்புரை.
5. முள்ளூர் மலையனுடைய தென்பது, "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையனது" (நற். 170) , "முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன், முள்ளூர்க் கானம்" (குறுந். 312) , "முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி" (அகநா. 209) என்பவற்றாலும் விளங்கும்.

6. புறநா. 34: 20 - 23; குறிப்புரை. 5 - 6. புறநா. 125 : 18 - 9.

(123)

124

நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
5பீடுகெழு மலையற் பாடி யோரே.

(பி - ம்.) 3 ‘பெயர்குவர்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நல்லநாளன்றாகப் போகிப் 1புள்நிமித்தம் இடையே நின்று தடுப்பச் செவ்வியன்றாகச் சென்றுகூடிக் கூறுபாடன்றாக முனியும் வார்த்தைகளைச் சொல்லினும் வறிதாக மீள்வாரல்லர், ஒழுங்குபட ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய பெருமைபொருந்திய மலையையுடையோனைப் பாடியவர்கள்-எ - று.

மலையற்பாடியோர் வறிதுபெயர்குநரல்லரெனக் கூட்டுக.

அன்றியென்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாகலின்.

வறிதென்னும் குறிப்புவினையெச்சம் பெயர்குநரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது. வறியரென்றுரைப்பாரும் உளர்.

(கு - ரை.) 1. நாள் - ஈண்டு நல்ல நாளின் மேற்று. "புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்" (மலைபடு. 448) ; "நாளும் புள்ளுங் கேளா வூக்கமோ, டெங்கோ னேயின னாதலின் யாமத்துச், செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய், மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப, விரிச்சி யோர்த்தல் வேண்டா, எயிற்புறந்தருதும் யாம் பகைப்புல நிரையே" (தகடூர் யாத்திரை)


1.புள்நிமித்தம் - பறவைச் சகுனம்; நிமித்தம் என்பதற்கு அறிவிப்பது என்று பொருள்; பின் வரும் நன்மை தீமைகளை அறிவிப்பது என்றபடி.