127 | களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப | | 5 | ஈகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீஇய | | 10 | முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே. |
திணை - அது; துறை - கடைநிலை. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. (இ - ள்.) களாப்பழம்போலும் கரிய கோட்டையுடைத்தாகிய சிறிய யாழைக்கொண்டு பாடும் இனிய 1பாட்டைவல்ல பாணர் பரிசில்பெற்றுக் கொண்டு போனார்களாக, களிறுகள் இல்லையாகிய புல்லிய பக்கத்தையுடைய நெடிய தறியின்கண்ணே காட்டுமயில்கள் தத்தம் இனத்தோடு தங்கப் பிறிதோரணிகலமுமின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தையணிந்த மகளிருடனே பொலிவழிந்து சாய்ந்ததென்று சொல்லுப, ஆயுடைய கோயிலை; நுகர்தற்கு இனிதாகிய தாளிப்பையுடைய அடிசிலைப் பிறர்க்கு உதவலின்றித் தம்முடைய வயிற்றையே நிறைத்துச் சொல்லுதற்கமைந்த மேம்பட்ட புகழைநீங்கிய முரசுபொருந்திய செல்வத்தினையுடைய அரசர்கோயில், இதனை ஒவ்வாது-எ - று. என்றதன் கருத்து : செல்வர் நகர் பெருந்திருவுடைமையிற் சிறந்தது போன்றிருப்பினும், ஆய்கோயில் வறிதெனினும் இஃது அதனினுஞ் சிறந்ததென்பதாம். ஆய்கோயில் சாயின்றென்ப; ஆயினும் முரசுகெழுசெல்வர் நகர் இதனை ஒவ்வாதெனக் கூட்டுக. (கு - ரை.) 1. புறநா. 145 : 5; "கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப" (நெடுநல். 70) ; "கருங்கோட்டுச் சீறியாழ்" (மலைபடு. 534) 4. சேப்ப - தங்க. 1 - 6. "ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன், விற்றுக் கோட் டக்க துடைத்து" (குறள், 220) ; "வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன், நல்குரவே போலு நனிநல்ல" (நீதிநெறி. 67)
1.பாணர் களிறு பெறுதல் : புறநா. 140 : 8, குறிப்புரை
|