பக்கம் எண் :

26

னானும்’ எனவே, இவன் இவ்வுலகத்து நிலைபேறுடையனெனவும், ‘பகல்விளங்காய்’ எனவே, இவன் இருபொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப்படும். முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபட வருதலின் இது வேறுபட வந்ததாயிற்று” (தொல். உவம. சூ. 32, பேர்.)

(8)

9

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

திணையும் துறையும் அவை.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

(இ - ள்.) ஆவும், ஆனினதியல்பையுடைய அந்தணரும், மகளிரும், நோயுடையீரும், பாதுகாத்துத் தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக்கிரியையைப் பண்ணும் பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும் எம்முடைய அம்பை விரையச் செலுத்தக்கடவேம், நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையுமென்று அறநெறியைச் சொல்லும் மேற்கோளினையும் அதற்கேற்ற மறத்தினையுமுடைய, கொல்யானைமேலே எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை நிழற்செய்யும் எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக; தம்முடைய கோவாகிய, சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் 1 கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய நெடியோனால் (பி - ம். உயர்ந்தோனால்) உளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளியென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்-எ - று.

எங்கோவாகிய குடுமி, பஃறுளியாற்றின் மணலினும் பலகாலம் வாழியவெனக் கூட்டுக.

கொடி விசும்பு நிழற்றும் (6) என்பது, சினைவினைப்பாற்பட்டு எங்கோவென்னும் (7) முதலொடு முடிந்தது; கொடியால் விசும்பு நிழற்று மென்றுரைப்பினும் அமையும்; மீமிசைக்கொடி விசும்பு


1. ‘‘கடற்றெய்வங் காட்டிக் காட்டி” (சிலப். கானல்வரி, சார்த்துவரி)