மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்பட்ட கொடுமையை ஒருவன் பாற் காணின், அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து அத்தீமைக்குத் தகத் தண்டஞ்செய்வை; வந்து நின்பாதத்தை யடைந்து முன்னே நிற்பாராயின், அவர் பிழைசெய்வதற்குமுன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக அவரைச்செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்று உண்ண உண்ண அமையாத மணங்கமழும் தாளிப்பையுடைய அடிசிலை விருந்தினர்க்கு மிகுதி குறைபடாமல் வழங்கும் பழிதீர்ந்த மனைவாழ்க்கையையுடைய பெண்டிர் முயக்கத்தால் மாறுபடுத்தலல்லது வீரர் போரால் மாறுபடுத்தலொழிந்த இந்திரவிற்போலும் மாலையையுடைய மார்ப! ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச்செய்தே மென்று கருதாத செய்கையையும் சேய்மைக்கண்ணே விளங்கும் புகழினையுமுடைய நெய்தலங்கானலென்னும் ஊரையுடைய நெடியோய்! அணுகவந்தேம் யாம்; நின் பலகுணங்களையும் புகழ்வேமாக. - எ - று. வழிபடுவோரை வல்லறிதியென்றது, 1 அறிந்து அவர்களுக்கு அருள் செய்வையென்பதாம். பெரிது (6) என்பது வினையெச்சக் குறிப்பாகலின், ஆகவென ஒரு சொல் வருவித்து உரைக்கப்பட்டது. பண்டையிற்பெரிது தணிதியென்பதற்கு நீ பண்டு செய்த கோபத்தினும் பெரிதாகத் தணிதியென்றுரைப்பினும் அமையும். அடப்பட்டமையாக அமிழ்துபோலும் அடிசில் (7) என்றுரைப்பினும் அமையும். நெடியோய்! பல ஏத்துவேமாக எய்தவந்தனமெனக்கூட்டுக. (கு - ரை.) 3 - 4. ‘‘முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்” (கலித். 133 : 13) ; ‘‘எங்க ணினைய ரெனக்கருதி னேதமால், தங்கண்ண ராயினுந் தகவில தண்டக்கால், வன்கண்ண னாகி யொறுக்க வொறுக்கல்லா, மென்கண்ணா னாளா னரசு” (பழமொழி. 322) ; ‘‘தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற்பொருட்டு ஒப்ப நாடி அதற்குத் தகவொறுத்தல்” (குறள், பரிமேல். உரைப்பாயிரம்) 5 - 6. ‘‘அஞ்சினர்க் களித்தலும்” (சிறுபாண். 210) 8. வாழ்க்கை : ஐங்குறுநூற்றின் முதற்பத்தால் விளங்கும். 10. போகிய : ‘‘மக்கள் போகிய வணிலாடு முன்றில்” (குறுந். 41)
1. ‘அறிதி’ என்றதற்குஇங்கே எழுதிய உரைநயம், ‘‘ஒருவாரண மழைப்ப நீயோவந் தேனென்றாய்” (கம்ப. விராதன். 49) , ‘‘எங்கை மீரேனென்கிலீர்” (தக்க. 298) , ‘‘என்னென்றா னெங்கட்கிறை” (நள. காப்பு) என்பவற்றிலுள்ள ‘ஏனென்றாய்’, ‘ஏனென்கிலீர்,’ ‘என்னென்றான்’ என்பவற்றிற்கு இன்னவாறு பொருள்செய்யவேண்டுமென்பதை நன்கு புலப்படுத்துகின்றது.
|