| 15 | குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. |
திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி (பி - ம். இளவினி) பாடியது. (11) (இ - ள்.) ஐய மயிரையுடைய திரண்ட முன்கையினையும் தூய ஆபரணத்தையுமுடைய பேதைமகளிர் வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு வளைந்த கோட்டுப்பூவைப் பறித்துக் குளிர்ந்த ஆன் பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து விளையாடும் வானைமுட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின்கட் பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும், பகைதொறும் வெம்மையையுடைய அரணை அழித்துவலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; அப்புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த பலகழஞ்சாற் செய்யப்பட்ட நன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்; அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு முதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும், விளங்கிய தழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரை யாகிய வெள்ளிநாராற் றொடுத்த பூவைப் பெற்றான் - எ - று. பாடினி இழைபெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அதுபெறு கின்றிலேனெனப் பரிசில்கடாநிலையாயிற்று; இனி, இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவுகொண்டு பாடினாளொருத்தியெனவும், ‘இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையான், எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்‘ எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில்கடாயினாளெனவுங் கூறுவாருமுளர். ‘பாடினிக்கு,.....பாண்மகன்’ என்பது, 1‘அதுவெனுருபுகெடக் குகரம் வந்தது; உயர்திணையாகலின். 2பாடினிபாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகனெனினும் அமையும். எனவும், ஆங்கும் : அசைநிலை; பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன. (கு - ரை.) 1. ‘‘அரிமுன்கை’‘ (கலித். 147 : 36) . அரியென்பது ஐம்மைப் பொருளில் வருமென்பதற்கு இவ்வடிமேற்கோள்; தொல். உரி. சூ. 59, இளம்.; சூ. 60, சே.; சூ. 58, ந.; இ. வி. சூ. 290, ‘அரி மயிர் முன்கை‘ என்பது அழகு; நேமி. சொல். 59, உரை.
1. தொல். வேற்றுமைமயங்கு. சூ. 11. 2. ‘‘பாடினி, பாடின பாணிக் கேற்ப” (பொருந. 47 - 8)
|