பக்கம் எண் :

396

நின்னோரன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவ னென்னும்வண்டுமூசு கண்ணி
10இனையோற்கொண்டனை யாயின்
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.

(பி - ம்.) 7 ’யருக்கிய வசைதீராற்றல்’

திணையும் துறையும் அவை.

அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

(இ - ள்.) மிகவும் அறிவுடையையல்லை, ஈரமில்லாத கூற்றமே! நினக்குப் போவதொரு விரகில்லாமையினான் மேல் விளைந்து பயன்படும் விதையைக் குற்றியுண்டாய்; ஆயின் நினக்கு இவ்வாறு சொல்லிய வார்த்தை நல்லமெய்யாதல் இன்னமுங் காண்பை; ஒளி விளங்கிய வாட்போரைவல்ல வீரரும் யானையும் குதிரையும் உதிரமாகிய நிறமுடைய அழகிய நீர்மிக்க போர்க்களத்தின்கண் மாய நாள்தோறும் அமையானாய் எதிர்நின்று கொன்று நாள்தோறும் நினதுமெய் வாடுதற்கேதுவாகிய பசிதீர்த்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய கொலைத்தொழிலுக்கு நின்னையொத்த பொன்னானியன்ற பேரணிகலத்தையுடைய வளவனென்று சொல்லப்படும் வண்டுகள் மொய்க்கப்படும் கண்ணியையுடைய இத்தன்மையினையுடையோனை நீ கொண்டாயாயின், இனி நின்பசியைக் கெடுப்போர் யார்; சொல்லுவாயாக-எ-று.

கூற்றமே! இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்தட்டுண்டனை; நன்வாயாகுதல் இன்னுங் காண்குவையெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

நயன் - நியாயமுமாம்.

(கு - ரை.) 1. உரிச்சொற்றொடருக்கும் (நன். சூ. 151, 259, 373, மயிலை.; நன். வி. சூ. 152, 374, இ. வி. சூ. 54. உரை) , உரிச்சொல் பெயரை யடுத்து வந்ததற்கும் (நன். சூ. 441; மயிலை.) , நனியென்னு முரிச்சொல் மிகுதி யென்னும் பண்பை விளக்கியதற்கும் (நன். சூ. 455, மயிலை; நன். வி. சூ. 456) மேற்கோள்.

2. புறநா. 230 : 13.

4. ‘‘ஒளிறுவாண் மறவருந் தேரு மாவும், களிறுஞ் சூழ்தர” (மணி1. 68 - 9)

(227)

228

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை
அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே