பக்கம் எண் :

399

(இ - ள்.) மேடவிராசிபொருந்தியகார்த்திகைநாளின் முதற்காலின் கண் நிறைந்தஇருளையுடைய பாதியிரவின்கண் முடப்பனைபோலும் வடிவையுடைய அனுடநாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக் கயமாகிய 1குளவடிவுபோலும் வடிவையுடையபுனர்பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப்பங்குனிமாதத்தினது முதற்பதினைந்தின்கண் உச்சமாகியஉத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய அதற்கு எட்டாமீனாகியமூலம் அதற்கெதிரே எழாநிற்க அந்த உத்தரத்திற்குமுன்செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகியநக்கத்திரம் (நக்ஷத்திரம்) துறையிடத்தே தாழக்கீழ்த்திசையிற் போகாது வடதிசையிற் போகாதுகடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்றதீப்பரக்கக் காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து ஒருமீன்வீழ்ந்தது வானத்தினின்றும்; அதனைப் பார்த்து யாமும் பிறருமாகியபல்வேறு வகைப்பட்ட இரவலர் எம்முடைய பறையொலி போலும்ஒலியை யுடைய அருவியையுடைய நல்ல மலைநாட்டுக்கு வேந்தனாகியவன்நோயையுடையனல்லனாகப் பெறின் அழகிதென இரங்கியநெஞ்சத்துடனே மடிந்தவுள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்;அஞ்சினபடியே ஏழாம் நாள் வந்ததாகலின் இன்று, வலியையுடைய யானை கையைநிலத்தே யிட்டு வைத்துத் துஞ்சவும், திண்ணிய வாராற்பிணிக்கப்பட்ட முரசம் கண்கிழிந்து உருளவும், உலகிற்குக்காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும்,காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள்கதியின்றிக் கிடக்கவும் இப்படிக்கிடக்கத் தேவருலகத்தைஅடைந்தான்; ஆகையாலே, ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்குமேவப்பட்ட துணையாகித் தனக்குத் துணையாகிய மகளிரையும்மறந்தான்கொல்லோ? பகைவரைப் பிணித்துக்கொள்ளும்வலியையும் நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாதவண்மையையுமுடைய நீலமலை போலும் மாயோன்-எ-று.

மன்னும், தில்லும் : அசை.

கயத்துக்குளக்கடையென்க.

2நற்றிசையாகியகிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும்மேற்குமாகிய இரண்டனுள் ஒருதிசைக்கண் வீழ்ந்ததென்றும்ஆம்; அன்றி வடக்குங்கிழக்குஞ் செல்லாதெனவே வடகிழக்கேவீழ்ந்ததென்றுமாம்.


1.புனர்பூசம் கயமாகிய குளவடிவமுடையது; அதனால், அதுகயமென்றும், குளமென்றும், ஏரியென்றும் பெயர்பெறும்; ‘‘அதிதிநாள்கழை யாவண மேரி, புனர்தங் கரும்பிவை புனர்பூச மாகும்” (பிங்கலந்தை)

2.இனிமங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும்நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையைமுற்கூறினார்’ (தொல். பாயிரம், .) ; தண்டி. சூ, 108, மேற்.