பக்கம் எண் :

403

திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - தும்பை; துறை - பாண்பாட்டு)

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக ; யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஒருபயன்படாமையின் அவை யல்லவாக; நடப்பட்ட கல்லின்கட் பீலியைச் சூட்டி 1நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய கலத்தான் உகுப்பவும் அதனைக் கொள்வனோ, கொள்ளானோ சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று.

நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்துகுப்பவும் கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

(கு - ரை.) 1. இல்லாகியர் : புறநா. 190 : 5. ஆகியர் - வியங்கோள்.

3. புறநா. 264 : 3 - 4. நார் - பன்னாடை.

(232)

233

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
5இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்
போரடு தானை யெவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பலவென
வைகுறு விடிய லியம்பிய குரலே.

திணையும் துறையும் அவை.

வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

(இ - ள்.) பொய்யாகுக; பொய்யாகுக; பரந்த அடியினையுடைய யானையைப் பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும் சீர்மைபொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உளதாகிய பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; பெரிய பாண்சுற்றத்திற்கு முதல்வன், பேரணிகலத்தினையுடைய, போரின்கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண் வேல் தைத்த சிறந்தபுண் பலவென வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை-எ - று.

பெரும்பூண் மார்பென இயையும்.

திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை.

பொன் : ஈண்டு இரும்பு.

அடுக்கு விரைவின்கண் வந்தது.

இயம்பிய குரல் பொய்யாகியரெனக்கூட்டுக.


1.புறநா. 297 : 5 - 6.