பக்கம் எண் :

405

235

சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
5பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந்தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
10அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
15அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப,் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
20றீயாது வீயு முயிர்தவப் பலவே.

(பி - ம்.) 10 ‘அருங்கலை’ 10 - 11 ‘துளையிரப்போர்’ 12 ‘பார்வை’ 15 ‘திருநிறத்திலங்கிய’ 17 ‘பாடுநருக்கொன் றீயுநரும்’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.

(இ - ள்.) சிறிய அளவினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்குத் தருவன்; அது கழிந்தது! பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான்; அது கழிந்தது! சோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! என்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்; அது கழிந்தது! அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பன்; அதுகழிந்ததே! தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும் தன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத் தடவுவன்; அது கழிந்ததே! அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி