பக்கம் எண் :

602

மூன்றாம் பதிப்பின் முகவுரை

திருச்சிற்றம்பலம்

(தேவாரம்)

“ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே
அடக்குவித்தா லாரொருவ ரடங்கா தாரே
ஓட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே
உருகுவித்தா லாரொருவ ருருகா தாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே
பணிவித்தா லாரொருவர் பணியா தாரே
காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே”

அமிழ்திற் சிறந்த தமிழ்மொழியதனை ஒன்பான் சுவை புணர்த் தன்பால் வளர்த்தருள் நச்சும் பெருமை முச்சங்கத்துள் கடைச்சங்கப் புலவர்கள் அருளிச் செய்த 1எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். மற்ற ஏழு நூல்களாவன :- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு என்பன.

இவற்றுள் ஒவ்வொன்றும் பலராற் செய்யப்பட்டுத் தொழில் அளவு பாட்டு பொருளென்பனவற்றுள் ஒவ்வொன்றால் தொகுக்கப்பட்டமையின், இவை தொகையென்று பெயர்பெற்றன வென்பர்.

புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை உடையது. அப்பாக்களுள் முதற் செய்யுளாகிய கடவுள்வாழ்த்து, பாரதம்பாடிய பெருந்தேவனாராலும் மற்ற 399 பாக்களும்
முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர்கிழார் இறுதியாகவுள்ள புலவர் பலராலும் இயற்றப்பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தோறும் தொகுப்பித்தோறும் இன்னாரின்னாரென்று விளங்கவில்லை. இந்நூலிலுள்ள பாக்களினுடைய அடிகளின் சிறுமை பெருமையும் தெரியவில்லை. இது புறப்பாட்டெனவும் புறமெனவும் புறம்புநானூறெனவும் வழங்கும். அகம் புறமென்னும் பொருள்கள் இரண்டனுள் புறத்தால் தொகுக்கப்பெற்றது இது.


1. இவை எட்டும் அச்சிடப் பெற்றுள்ளன.