பக்கம் எண் :

603

அகமாவது ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முட் கூடுகின்ற காலத்துப் பிறந்து அக்கூட்டத்தின் பின்பு அவ்விருவராலும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் எப்பொழுதும் உள்ளத்துணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம்; இன்பம்பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கத்தை அகமென்றது ஆகுபெயர்; அகம் - உள்.

புறமாவது மேற்கூறிய ஒத்த அன்புடையாராலேயே யன்றி எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு இஃது இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படும் பொருள்; அதில் அறனும், பொருளும் அடங்கும்; அறனும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழு மொழுக்கத்தை புறமென்றது ஆகுபெயர்; புறம் -வெளி.

இந்நூல் மேற்கூறிய புறத்தின் பகுதியாகிய வெட்சி முதலிய திணைகளுக்குரிய துறைப்பொருளமைந்த 400 பாக்களையுடைமையின், புறநானூறென்று பெயர் பெற்றது. அத்திணைகளாவன :-வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணையென்பன. திணை - ஒழுக்கம். துறை - மக்களும் விலங்குகள் முதலியனவும் சென்று நீருண்ணும் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதற்குரிய வழி.

பண்டைக் காலத்தே இத்தமிழ் நாட்டிலிருந்த சேர சோழ பாண்டியர்களாகிய முடியுடை வேந்தர், சிற்றரசர,் அமைச்சர்,சேனைத்தலைவர், வீரர் முதலிய பலருடைய சரித்திரங்களும், கடையெழு வள்ளல்களின் சரித்திரங்களும். கடைச்சங்கப் புலவர் பலருடைய வரலாறுகளும், அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும், இன்னும் பற்பலவும் இந்நூலால் நன்கு புலப்படும். இந்நூற்செய்யுட்களாற் பாடப்பட்டவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தாரல்லர்; ஒரு சாதியாரல்லர்; ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே. இவர்களில் அந்தணர் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்; பெண்பாலாரும் உளர்.

‘முன்னா ளிடையே யிந்நா டாண்ட
காவலர் பல்லோர் பாவலர் பல்லோர்
மாசரி தத்தை யாசற விளக்கிச்
சொற்சுவை பொருட்சுவை துவன்றியெஞ் ஞான்றும்
5 ஒப்புமை யில்லாத் திப்பிய நடையுடைத்