உறையூர் முதுகூத்தனார் :-இப்பெயர் முதுகூற்றனாரெனவும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது; “வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர், இன்கடுங் கள்ளி னுறந்தை” (அகநா. 137) என இவரே கூறியிருத்தலால் தம்முடைய ஊரில் இவர் அன்புடையரென்பதும், அவ்வூர் அரசராகிய சோழரால் நன்கு மதிக்கப்பெற்றவரென்பதும் வெளியாகின்றன; “உள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறையூட்டும், இற்பொலி மகடூஉ” (331) எனக் கற்புடை மங்கையினியல்பையும், “தேவிற் சிறந்த திருவள் ளுவர்குறள்வெண்பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் - நாவிற், குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ், செயலில்லை யென்னுந் திரு” (திருவள். 39) எனத் திருக்குறளின் சிறப்பையும் பாராட்டியிருத்தல் மதிக்கற் பாலது; இவர் வாக்கிற் பெரும்பாலுங் காணப்படுவது பாலை நிலத்தினியல்பு; இவர் செய்தனவாக 6 பாடல்கள் தெரிகின்றன : அகநா. 2; குறுந். 2; திருவள். 1; புறநா. 1. ஊன்பொதிபசுங்குடையார் :-இவராற் பாடப்பட்டோர் சேரமான் பாமுளூரெறிந்த இளஞ்சேட்சென்னி, சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி, சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி யென்பார்; இவர் அரசர்களுக்குத் தருமங்களைக் கற்பிக்கும் முறை மிக அழகுவாய்ந்தது; இராவணன் உயிரோடிருக்கையில் தம்பால் அடைக்கலம்புகுந்த விபீடணனுக்கு இராமர் இலங்கா ராச்சியமளித்ததை உட்கொண்டு, “ஒன்னார், ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய்” (203) எனக் கூறியிருத்தலையும், மிக்க வறுமையுற்ற கிணிப்பொருநனொருவன் தன் உறவினரோடு சென்றகாலத்தில் ஓருபகாரி அவர்களுடைய நிலைமைக்கு எத்தனையோ மடங்கு மேற்பட்டுள்ளனவாகிய அணிகலங்களைக் கொணர்வித்து அவர்களிடையே சொரிவித்தபொழுது, அவர்கள் அணியும் முறையறியாமல் தடுமாற்ற முற்று விரைந்து சென்று அவற்றை அணிந்து கொண்டதற்கு இராவணன் வௌவிச்சென்ற சீதை தான் சென்றவழியை இராமன் அறிந்துகொள்ளுதற்கு அடையாளமாகத் துகிலால் முடிந்து வீழ்த்திய அணிகலங்களைக் கண்ட வானரங்கள் தனித்தனியே விரைந்தெடுத்து அவற்றை அணிந்துகொள்ளுந் தடுமாற்றத்தை உவமித்திருப்பதையும் (378) நோக்குகையில், இராமசரித்திரம் இவருடைய ஞாபகத்திலிருந்து வந்ததென்பதும், வறுமையின் இயல்பை விளங்கக் கூறுதலில் இவர் வல்லுநரென்பதும் விளங்குகின்றன. இவரியற்றிய செய்யுட்கள் இந்நூலில் நான்கு. எருக்காட்டூர்த் தாயங்கண்ணணார் :-எருக்காட்டூரென்பது திரு வாரூர்க்குத் தென்மேற்கில் மூன்றுநாழிகைவழித்துாரத்தில் உள்ள தென்பர்; கண்ணனென்பது க்ருஷ்ணனென்னும் தெய்வப்பெயரின் சிதைவுபோலும்; ‘கண்ணனென்பது கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு’ (திருக்கோவையார், 53, பேர்.) என்பது ஈண்டறியற் பாலது; “செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த, தீயொடு விளங்கு நாடன்” (397) என அந்தணரின் வேள்வித்தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்; அக்காலத்திருந்த அரசரால் இவருக்கு இவ்வூர் பிரமதாயமாகக் கிடைத்ததென்று தெரிகிறது; தாயம் - உரிமை. இவராற் பாடப்பட்டோன் சோழன்குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவன்; இவர்காலத்துப் புலவர்கள் அவனைப் பாடிய ஆலத்துார்கிழார் முதலியோர்; தாயங்கண்ணாரென்று ஒரு புலவர் பெயர் தொகை நூல்களிற் காணப்படுகின்றது; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. இந்நூலிலன்றி, இவர் செய்தனவாக அகநானூற்றில் 7 செய்யுட்கள் உண்டு. எருமைவெளியனார் :-எருமைவெளியென்பது ஓரூர். இவராற் குதிரை மறமென்னுந் துறை மிகச் செவ்விதாகப் பாடப்பெற்றுள்ளது. இவரியற்றிய பாடல்கள் - 3 : அகநா. 1; புறநா. 2. ஐயாதிச் சிறுவெண்டேரையார் :-யாக்கை நிலையாமையை அறிவித்தல் வாயிலாக விரைந்து அறஞ்செய்க என்று இவர் அறிவுறுத்துகின்றார்; சிறுவெண்டேரையாரென்று இந்நூலுள் ஒருவர் பெயர் காணப்படுகின்றது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ விளங்கவில்லை. ஐயூர் முடவனார் :-இவருக்கு முடவனாரென்னும்பெயர் சினையால் வந்தது போலும்; இப்பெயர் ஐயூர்கிழாரெனவும், உறையூர் முடவனாரெனவும் சில பிரதிகளில் உள்ளது. ஐயூர் என்பது சோழநாட்டகத்தோர் ஊர். இவர் நடந்துசெல்லுதற்கு இயலாத முடவராதலின், தாமான் தோன்றிக்கோனை அடைந்து வண்டியிழுத்தற்குப் பகடுவேண்டுமென்று பாடி, அவன்பகடுகளும் பல பசுநிரைகளும் ஊர்தியுங் கொடுக்கப்பெற்று வாழ்ந்தவர்; இறந்தோருடம்பைத் தாழியாற்கவித்தலுண்டென்பதும் வீரச்சிறப்பும் கொடைச்சிறப்பும் இவர் பாடல்களிற் காணப்படுகின்றன. இவராற் பாடப்பட்டோர் ஆதனெழினி, தாமான் தோன்றிக்கோன், சோழன்குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதியென்பார். “அறவரறவன் மறவர் மறவன், மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன், இசையிற் கொண்டான்” என்பது இவர் தாமான் தோன்றிக்கோனைப் பாராட்டிய பகுதி. இவர் செய்தனவாக 10 செய்யுட்கள் தொகை நூல்களிற் காணப்படுகின்றன; அகநா. 1; குறுந். 3; நற். 2; புறநா. 4. ஐயூர் மூலங்கிழார் :-இவருக்கு இப்பெயர் மூலமென்னும் நாண்மீனால் வந்ததுபோலும்; இவர்பாடலில் வேங்கைமார்பனென்னும் தலைவனாற் பாதுகாக்கப்பட்டுள்ள காணப்பேரென்னும் ஊரில் அமைந்திருந்த அரணின் அமைதி கூறப்பெற்றுள்ளது; இவராற் பாடப்பட்டோன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெருவழுதி. இவர்காலத்துப் புலவர் அவ்வழுதியைப் பாடியவர்களாவர்.
|