பக்கம் எண் :

618

ஒக்கூர் மாசாத்தனார் :-இவர் செய்யுளிற் கணவனை யிழந்த மகளிர் புல்லரசிக் கூழை அகாலத்திலுண்டு கைம்மைநோன்பு நோற்றிருத்தல் கூறப்பெற்றுள்ளது. இப்பெயர் எக்கூர் மாசாத்தனா ரென்றும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் இயற்றியதாக அகநானூற்றில் ஒரு செய்யுள் (14) உள்ளது.

ஒக்கூர் மாசாத்தியார் :-இவர் பெண்பாலார். இவர் செய்யுளில் ஒரு மறக்குடிமகளின் வீரச்செயல் விசேடித்துப் பாராட்டப்பெற்றுள்ளது. இவர் பாடல்கள் முல்லைத்திணையைப் பற்றி வருவன. ஒக்கூர் என்பது
பாண்டி நாட்டில் திருக்கோஷ்டியூர்ப் புறத்தேயுள்ள ஓர் ஊர். இவர் செய்தனவாகக் கிடைத்த பாடல்கள் - 9 : அகநா. 3; குறுந். 5; புறநா. 1.

ஒருசிறைப் பெரியனார் :-இவர் நாஞ்சில்மலையின் வளத்தையும் அதன் தலைவனது இயல்பையும் பாராட்டியிருக்கின்றார். இவர் பெயர் ‘ஒருசிறைப்பெயரினார்’, ‘ஒரு சிறைப்பெயரியனார்’ என்று சில பிரதிகளிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோன் நாஞ்சில் வள்ளுவனென்பான். இவர் இயற்றிய பாடல்கள் - 3; குறுந். 1; நற். 1; புறநா. 1.

ஒரூஉத்தனார் :-இவர் செய்யுளில், ஒரு வீரன் பகைவர் சேனையைத் தனியே நின்று தடுக்கும் மறச்செயலாகிய எருமைமறம் விளக்கப் பெற்றுள்ளது. இவர் இயற்றிய பாடல் புறநா. 275.

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் :-புதுக்கோட்டை ஸமஸ்தானத்திலுள்ள ஒலியமங்கலமென்னும் ஊரிலுள்ள சாஸனத்தால் ஒல்லையூரென்பது அவ்வூரென்று தெரிகின்றது. தென்னாட்டிலுள்ள பூதப்பாண்டியென்னுமோரூர் பண்டைக்காலத்தில் இவன்பெயரால் அமைக்கப் பெற்றதுபோலும். போர்க்களத்தில் இவன் கூறிய வஞ்சினவகைகள் அறியற்பாலன; போரில் வல்லவன்; செய்யுள் செய்தலிலும் திறமையுடையோன்; இதனை இவன் பாடிய பாடல் புலப்படுத்தும்; இவன் பெயர் பூதபாண்டியனெனவும் வழங்கும்; இவன் நட்பினர் ; மையலென்னும் ஊரிலுள்ள மாவன், எயிலென்னும் ஊரிலுள்ளானாகிய ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்னும் இவர்கள். இவன் மனைவி இவன் இறந்தவுடனே தீயிற் பாய்ந்து இறந்தாள். இவன் இயற்றிய பாடல்கள் - 4; அகநா. 1; புறநா. 3.

ஓரம்போகியார் :-இப்பெயர் ஓரம்போதியாரென்றும், ஓரேர் போகியாரென்றும் சில பிரதிகளில் உள்ளது. இவர் ஐங்குறுநூற்றில் மருதத்தைப் பொருளாகவுடைய முதலாம் நூறு இயற்றிய ஆசிரியர்; மருதத்திணையில் மிகப் பயின்றவர்; தமிழ்நாட்டரசர் மூவராலும் பிற உபகாரிகளாலும் நன்கு மதிக்கப்பெற்றவர்; இவைகள் இவரியற்றிய