செய்யுட்களால் புலனாகின்றன. எட்டுத்தொகையில் ஐங்குறுநூற்றின் முதல் நூறுபாடலை யன்றி இவர் இயற்றினவாக 8 - செய்யுட்கள் தெரிகின்றன : நற். 2; குறுந். 4; அகநா. 1; புறநா. 1. இவருடைய செய்யுட்களில் 106 மருதத்திணையின் வளத்தையே புலப்படுத்துவன. இவராற் பாடப்பட்டோர் சேரமான் ஆதனெழினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் என்னும் இவர்கள். இவர் பாடலில் வந்துள்ள ஊர்கள்: ஆமூர், இருப்பை, கழார், தேனூர் என்பன: நதிகள்: காவிரி, வையை யென்பன; விழவு : இந்திரவிழவு; விரதம் : தைந்நீராடல். ஓரேருழவர் :-வினைமுற்றி மீளும் தலைமகன் தலைமகளைக் காண்டற்கு விரையும் தன் நெஞ்சிற்கு ஈரச்செவ்வியில் விதைவிதைத்தற் பொருட்டுக் கொல்லையை அடைதற்கு விரையும் ஓரேருழவனை உவமை கூறிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றனர்; “ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட், பேரமர்க் கண்ணி யிருந்த வூரே, நெடுஞ்சேணாரிடை யதுவே நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத், தோரேருழவன் போலப், பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே” (குறுந். 131) என்பதனால் உணர்க. இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. தம்முடைய செய்யுளில் இல்லறத்தை வெறுத்துக் கூறுதலின், இவர் துறவறத்தில் விருப்புடையாரென்று சொல்ல இடமுண்டு. இந்நூலில் இவர் இயற்றிய செய்யுள் : 193. ஒளவையார் :-இவர் அதியமான் நெடுமானஞ்சியிடம் அமுதமயமாகிய நெல்லிக்கனி பெற்று அவனைப் புகழ்ந்தார். இவர் அக்கனியைப் பெற்றமை இந்நூல் 91-ஆம் பாட்டினாலும், “பூங்கமல வாவிசூழ் புல் வேளூர்ப் பூதனையும், ஆங்குவரும் பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கே, மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றி னாவை, அறுப்பித்தா யாமலகந் தந்து” என்னும் வெண்பாவாலும், 100-ஆம் திருக்குறளுக்குப் பரிமேலழகர், ‘இனியகனிகளென்றது ஒளவையுண்ட நெல்லிக்கனி போல் அமிழ்தாவனவற்றை’ என்று எழுதிய விசேடவுரையாலும் வெளியாகின்றது. இவராற் பாடப்பட்டோர் : அதியமான் நெடுமானஞ்சி, தொண்டைமான், அதியமான்மகன் பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்பார். இவரியற்றிய பாடல்கள் புறநானூற்றிலன்றி. நற்றிணையிலும், குறுந்தொகையிலும், அகநானூற்றிலும், புறநானூற்றிலும், தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கலவிருத்தியுரை முதலியவற்றிலும் காணப்படுகின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக்கோவை முதலியன இவரியற்றிய நூல்களென்பர். இவர் அவ்வச்சமயத்துச் செய்தனவாகவுள்ள தனிப்பாடல்கள் மிகப் பல. பகைவரை நோக்கிக் கூறுவார்போல, அதியமான் நெடுமானஞ்சியின் குணங்களை இவர் பாராட்டிக் கூறியிருக்கும் பகுதிகளும் அவனால் தூதனுப்பப்பட்டுச்
|