சென்றபொழுது தன் மேம்பாட்டைப் புலப்படுத்தற் பொருட்டுத் தொண்டைமான் தன் படைக்கலக்கொட்டிலைக் காட்டக் கண்டு அப்படைக்கலங்களைப் புகழ்வார்போல அதியமானது போர்த் திறத்தை வெளிப்படுத்தியிருக்கும் பகுதியும் மிக்க விம்மிதத்தை விளைவிக்கும். அதியமான் கோவலுாரெறிந்ததனைப் பரணர் பாடியதையும் (புறநா. 96) , மூவேந்தரும் சேனைகளுடன் பாரியை வெல்லக் கருதி அவன் நகரைச் சூழ்ந்து புகல்போக்கின்றித் தடுத்தபோது பறவைகளால் நெற்கதிரைப் புறத்திருந்து வருவித்து உள் நகரத்தாரைப் பசியால் வருந்தாதபடி பாதுகாத்தளித்த கபிலர் செய்தியையும் (அகநா. 303) பிரிவாற்றாது வருந்திய வெள்ளிவீதியார் என்னும் புலமைவாய்ந்த பெண்பாலாருடைய துன்பமிகுதியையும் (அகநா. 147) புலப்படுத்தியிருத்தல் புலவரிடத்து இவருக்குள்ள பேரன்பை விளக்குகின்றது; பழையனூர்க் காரிக்காகச் சென்று ஆடொன்று கேட்டபோது சேரன் இவருடைய மேம்பாட்டை நினைந்து, பொன்னால் ஓர் ஆடு செய்வித்து அளிக்க, இவர் அதனைப்பெற்று மனமகிழ்ந்து, “சேரா! உன்னாடு பொன்னாடு (உன் நாடு பொன் நாடு) ” என்று கூறினாரென்றும் அதனால் மலைநாடு இதுகாறும் சிறப்புற்று விளங்குகிறதென்றும் ஒரு செய்தி வழங்குகிறது. தம்முடைய கூற்றாகவன்றிப் பாடியிரத்தற்குரிய விறலி முதலியவர்களின் கூற்றுக்களாகவும் இவர் பாடிய பாடல்கள் இந்நூலிலும் பிறநூல்களிலும் காணப்படும். ஆராய்வோர், அதனைக்கொண்டு இவரை விறலி முதலியவர்களாக நினைந்து விரைந்து முடிவுசெய்து விடுதல் மரபன்று; அங்ஙனம் பாடுதல் கவிமதமெனக் கொள்ளுதல் முறை; பிறபுலவர்கள் பாடல்களிலும் இம்முறை காணப்படும். தொகைநுால்களில் இவர் பெயர் ஒளவையெனவும் வழங்கும். கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி :-இவர் பாண்டியர் குடியிற் பிறந்தவர்; வழுதியாரென்ற பெயரே இதனைப் புலப்படுத்தும். பரிபாடலில் திருமாலுக்குரிய 15-ஆம் பாடலை இயற்றிய இளம்பெருவழுதியார் என்பவரும் இவரும் ஒருவராகவே கருதப்படுகின்றனர்; பரோபகாரச் செய்திகூறல் முதலிய கருத்துக்களில் இருவர் பாடல்களும் ஒத்திருத்தலும் பெயரொற்றுமையும் பிறவும் இக்கருத்தை வலியுறுத்தும். இளம் பிராயத்திலேயே பேரறிவினராக இருந்தது பற்றி இவர் இப்பெயரை அடைந்தனர்போலும்; ஒரு பெரியார்க்குச் சிறுப்பெரியார் என முற்காலத்திற் பெயர் வழங்கிற்று. ‘கடலுண் மாய்ந்த’ என்னும் அடை இறந்த பின்பு இவருடைய பெயரின் முன்னர் அமைக்கப்பெற்றதென்பது சொல்லாமலே விளங்கும்; ‘துஞ்சிய’ என்பதுபோல. சோலைமலையிலுள்ள திருமாலைப் பாடியிருத்தல் பற்றிச் சமயத்தால் இவர் வைணவராகக் கருதப்பெறுகின்றனர். இவர் பாடிய “உண்டாலம்ம” என்னும் இந்நூற்பாடல் சொல்லாலும் பொருளாலும் இனிமை வாய்ந்தது. இவருடைய ஏனை வரலாறுகளைப் பரிபாடற் பதிப்பிற் பாடினோர் வரலாற்றிற் காணலாகும்.
|