பக்கம் எண் :

621

கண்ணகனார் :-இவர் காலத்தவர் கோப்பெருஞ் சோழன். பிசிராந்தையார், பொத்தியார் முதலியோர்; பரிபாடலில் செவ்வேள் மேலதாகிய 21-ஆம் செய்யுளுக்கு இசைவகுத்தவர் இவரே. இதனால் இவரை முருகக்கடவுளின் அடியவராகக் கருதுவதற்கு இடமுண்டு. “என்றும், சான்றோர் சான்றோர்பால ராப, சாலார் சாலார் பாலரா குபவே” (218) என்பது இவர் வாக்கிற் சிறந்த பகுதி; இவராற் பாடப் பெற்றோர் பிசிராந்தையார்.

கணியன்பூங்குன்றன் :-கணியன் - சோதிடம்வல்லோன் : “விளை வெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி” (பு. வெ. 174) : பூங்குன்றமென்பது நாடொன்றின் தலைநகர் (நாலடி. 128, 212) 1இராமநாதபுரம் ஜில்லாவில் மகிபாலன்பட்டிக்கு அருகிலுள்ள சாஸனங்களில் அவ்வூர் பூங்குன்றநாட்டுப் பூங்குன்றமெனக் குறிக்கப்பட்டுள்ளது; அதனால் அவ்வூரே இப்புலவருக்குரிய ஊரென்று கொள்ளலாகும். இவருக்கு இப்பெயர் தொழிலாலும் இடத்தாலும் வந்ததுபோலும். இப்பெயர் கணிபுன்குன்றனாரெனவும் வழங்கும். இவராற் பாடப்பெற்றதும் அரிய பொருள்களமைந்ததுமான ‘யாதுமூரே’ (புறநா. 192) என்னுஞ் செய்யுள் படிக்குந்தோறும் நினைக்குந்தோறும் எவருக்கும் மிக்க இன்பத்தை விளைவிக்கும். நற்றிணையிலும் இவரியற்றிய பாடலொன்று உண்டு.

கபிலர் :-கபிலரென்னும் பெயருள்ள முனிவர் சிலருண்டு; அவருள், எவருடைய பெயர் இவருக்கு இடப்பட்டதோ அது விளங்கவில்லை. இவர் அந்தணர். வேள்பாரியின் நண்பர். அவன் இறந்த பின்பு அவன் மகளிரை அழைத்துச்சென்று மணம் செய்துகொள்ளும்படி விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களை வேண்டி அவர்கள் மறுத்தமையால் வெறுத்துப் பின்பு அம் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்துத் தம் கடனைக் கழித்தனர். இவர் பிறந்த ஊர் பாண்டிநாட்டிலுள்ள திருவாதவூர்; இது “நீதிமாமதூக நீழ 2னெட்டிலை யிருப்பை யென்றோர், காதல் கூர் பனுவல் பாடுங் கபிலனார் பிறந்த மூதுார், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துளங்கக் காட்டும், வேதநா யகனார் வாழும் வியன்றிருவாதவூரால்” (திருவால. 27 : 4) என்பதனால் வெளியாகின்றது. இவர் அந்தணவருணத்தினர்; “யானே, பரிசிலன் மன்னுமந்தணன்”, “யானே, தந்தை தோழ னிவரென் மகளிர், அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே” (புறநா. 200, 201) எனத் தம்மைப் புலப்படுத்துவதற்காக இவர் கூறிய செய்யுட்களும், “புலனழுக்கற்ற வந்த ணாளன்” (புறநா. 126) என மாறோக்கத்து


1. கலைமகள், தொகுதி, 8 : பக்கம் 226.

2.”நெட்டிலை யிருப்பை வட்ட வொண்பூ, வாடா தாயிற் பீடைப் பிடியின், கோடேய்க்கும்மே வாடிலொபைந்தலைப் பரதர் மனைதொறு முணங்கும், செந்தலை யிறலின் சீரேய்க் கும்மே”; இச்செய்யுள் தமிழ் நாவலர் சரிதையிற் கண்டது.