| சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்:- இவன், பாரதப் போரிற் பாண்டவர் துரியோதனாதியரென்னும் இருவகையார் சேனைக்கும் உணவளித்தான். இவ்வரலாற்றை, “ஓரைவ ரீரைம் பதின்ம ருடன் றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த, சேரன்பொறையன் மலையன் றிறம்பாடிக், கார்செய் குழலாட வாடாமோ வூசல், கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல்” என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதைச் செய்யுளும் புலப்படுத்தும், இதனாலேயே இவன் இப்பெயர் பெற்றான். இவனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர். சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை:- கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை யென்னும் பெயரைப் பார்க்க. மாந்தரன் - ஒரு சேரன் (பதிற். 90) ; “இலமல ரன்ன வஞ்செந் நாவிற், புலமீக் கூறும் புரையோ ரேத்தப், பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரன், பொறையன்”(அகநா. 142) ; அம்மாந்தரன் புதல்வனாதலின் இவனுக்கு இப்பெயர் வாய்ந்தது. இவன் காலத்துப் புலவர் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார். சேரமான் மாரிவெண்கோ:- இவன் காலத்தரசர்: பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெரு வழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுமாவர்; இவனைப் பாடியவர் ஒளவையார். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை:- கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையென்னும் பெயரைப் பார்க்க. இதனை ஒட்டுப்பெயரென்பர் (இ. வி. சூ. 38, உரை) . இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர்கிழார். இவனுடைய பிற வரலாறுகள் ஐங்குறுநூற்றிற் காணலாகும். சேரமான் வஞ்சன்:- இவன் பரிசிலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்போன்; இவனைப் பாடிய புலவர் திருத்தாமனார். சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான்கௌணியன் விண்ணந்தாயன்:- பூஞ்சாற்றூரென்பது முடிகொண்டானாற்றங்கரையிலுள்ளது; இவன் அந்தணர்திலகன்; கௌண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தோன்; ஓதல் முதலிய அறுவகைத்தொழிலிலும் சிறந்து பார்ப்பனவாகை பெற்றோன்; மிக்க கொடையாளி; இவனைப் பாடிய புலவர் ஆவூர் மூலங்கிழார். பூஞ்சிற்றூரென்று சில பிரதிகளிற் காணப்படுகின்றது. சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன்:- இவன் வேளாளரில் உழுவித்துண்போன்; முடியுடைவேந்தற்குமகட்கொடை நேர்தற்கு உரியோன் (தொல். அகத்திணை. சூ. 30. ந.) இவனைப் பாடிய புலவர் மதுரை நக்கீரர்.
|