பக்கம் எண் :

658

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி:- இவன் யுத்தத்தில் வல்லவன்; தேர்வண்மலையனென்பவனைத் துணையாகக் கொண்டு சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறையோடு பொருது அவனை வென்றான்; சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி யென்பவர்களின் நண்பன். இவனைப் பாடியவர்கள்: பாண்டரங்கண்ணனார், ஒளவையார், உலோச்சனார். இன்னும் இவன் காலத்துப் புலவர் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி:- இவன் சிறந்த வீரன். இவனைப் பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார். காலேகப்பள்ளியெனவும் பிரதிபேத முண்டு.

சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி:- இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் தந்தை; அழுந்தூர் வேளிடை மகட்கொண்டோன். இதனை, “மன்னர்பாங்கின்” (தொல். அகத்திணை. சூ. 30, .) என்பதன் உரையாலுணர்க; “உருவப்பஃறே ரிளையோன் சிறுவன்” (130) என்றார் பொருநராற்றுப்படையிலும்; வீரத்திலும் கொடையிலும் சிறந்தோன். இவன் பெயர் இளையோனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்; பரணர், பெருங்குன்றூர்கிழார்.

சோழன்கரிகாற் பெருவளத்தான்:- ,இவன் சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னியின் புதல்வன்; பொருந. 130; நாங்கூர் வேளிடை மகட்கொண்டோன்; தொல். அகத்திணை. சூ. 30, . தம்முள் மாறுபட்டுவந்து தன்னை இளையனென்றிகழ்ந்த முதியோர் பொருட்டுத் தான் முதியனாய் வந்து அவர்கள் வழக்கைத் தீர்த்தானென்றும், தான் கருவூரிலிருக்கையில், கழுமலமென்னுமுரிலிருந்த யானையாற் கொண்டு வரப்பட்டு அரசாட்சிக்குரியனாயினானென்றும், இளமையில் நெருப்பாற் சுடப்பட்டு உயிர் பிழைத்தானென்றும், இரும்பிடர்த்தலையாரை அம்மானாக உடையானென்றும் பழமொழி 21, 62, 105-ஆம் வெண்பாக்களும் அவற்றின் உரைகளும் விளக்குகின்றன. பொருநராற்றுப்படைக்கும் பட்டினப்பாலைக்கும் தலைவன் இவனே. பட்டினப்பாலை கேட்டுக் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குப் பதினாறுநூறாயிரம் பொன் பரிசளித்தானென்று கலிங்கத்துப்பரணி, இராச பாரம்பரியம் 22-ஆம் செய்யுளால் விளங்குகின்றது. 1வெண்ணியென்னும் ஊர்ப்புறத்தேயுள்ள போர்க் களத்திற் சேரமான் பெருஞ்சேரலாதனோடு போர்செய்து அவனையும் அவனோடு வந்த ஒரு பாண்டியனையும் அக்களத்தில் இவன் வென்றான்; இஃது “இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை, அரவாய் வேம்பினங்குழைத் தெரியலும், ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த, இருபெரு வேந்தரு மொருகளத் தவிய, வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட், கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” (143 - 8) என்னும் பொருநராற்றுப்படையால் விளங்குகின்றது. மேற்கூறிய முடிமன்னரிருவரோடு பதினொரு வேளிரையும் அக்களத்தே வென்றானென்று,


1. இவ்வூர் சோழநாட்டில் நீடாமங்கலத்திற்கு மேற்கேயுள்ளது; தேவாரம்பெற்றசிவஸ்தலம்; கோவிலுண்ணியென வழங்கப்படுகின்றது.