சொற்பெய்துரைத்தல் ஒவ்வொரு சொல்லுக்கும் மூலத்திலுள்ள முறையிலேயே உரை கூறும்பொழுது சில இடங்களில் கருத்தை விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து வரைதல் இவருடைய வழக்கம். கடவுள் வாழ்த்துச் செய்யுளில் இறைவனுடைய திருமிடற்றிலுள்ள கறையைப்பற்றி, “அக்கறை மறை நவிலந்தணர் நுவலவும் படுமே” என்று சிறப்பித்துள்ள பகுதிக்கு, ‘அக்கறுப்பு, தான்மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின் வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்’ என்று அது புகழப்படுதற்குரிய காரணத்தையும் உடன்பெய்துரைத்தார். இங்ஙனமே, “அப்பிறை, பதினெண் கணனு மேத்தவும் படுமே” என்றவிடத்து, ‘அப்பிறைதான் பெரியோன்சூடுதலால் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்’ என்று உரைகூறினர். “இருநிலத்தன்ன நோன்மை” (14) என்றவிடத்து ‘துளக்கப்படாமையின் பெரிய நிலம்போன்ற வலியினையும்’ என்று கூறினர். “நாடனென்கோவூர னென்கோ, பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பனென்கோ” (49) என்னும் பகுதிக்கு, ‘குறிஞ்சி நிலமுடைமையால் நாடனென்று சொல்லுவேனோ? மருதநிலமுடைமையால் ஊரனென்று சொல்லுவேனோ? நெய்தனிலமுடைமையால்...சேர்ப்பனென்று சொல்லுவேனோ? என்று பொருள் கூறினார். “மையன் மாலை” (67) என்பதற்கு, ‘தமியராயினோர்க்கு மயக்கத்தைச் செய்யும் மாலைப்பொழுது’ என்றும், “பகைவர், ஓடுகழற் கம்பலை கண்ட” (120) என்பதற்கு, ‘பகைவரது புறக்கொடுத்தோடும் வீரக்கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டுநின்ற’ என்றும், “பீடின்மன்னர்” (138) என்பதற்கு, ‘பிறர்க்கீயும் பெருமையில்லாத அரசர்’ என்றும் கூறினர். இங்ஙனம் பெய்துரைக்கும் முறையிற் சிலவிடங்களில் தாம் அங்ஙனம் கூட்டியுரைத்தமைக்குரிய காரணத்தை வெளியிடுவர்:- “நின்மதனுடைய முழவுத்தோ ளோச்சித் தண்ணென, வீசியோயே” (50) என்பதில், ‘வீசியோயே’ என்பதற்கு, ‘சாமரத்தாற் குளிரவீசினாய்’ என்று உரைவகுத்துவிட்டு ‘முழவுத்தோளோச்சியெனவும், தண்ணென வீசியோன் எனவும் கூறியவாற்றால், சாமரையென்பது பெற்றாம்’ என்று அதற்குரிய காரணமும் காட்டினர். “முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேனே, ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே, பாழூர்க் கிணற்றிற்றூர்கவென் செவியே” (132) என்னும் பாடற்பகுதிக்கு, ‘யாவரினும் முன்னே நினைக்கப் படுமவனைப் பின்பே நினைத்தேன் யான்; அவ்வாறு நினைந்த குற்றத்தால் எனதுள்ளம் அமிழ்ந்திப் போவதாக; அவனையன்றிப் பிறரைப்புகழ்ந்தநாவும் கருவியாற் பிளக்கப்பபடுவதாக; அவன்புகழன்றிப் பிறர் புகழைக் கூறக்
|