பக்கம் எண் :

680

கேட்ட எனது செவியும் பாழ்பட்ட ஊரின்கட்கிணறு போலத் தூர்வதாக’ என்று பலசொற்களைப் பெய்துரைத்து அங்ஙனம் உரைத்ததன் காரணத்தை, ‘முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளினேனென உள்ளம் ஆழ்தற்குக் காரணங் கூறினமையால், பிறரைப் புகழ்ந்த நாவெனவும், பிறர்புகழ் கேட்ட செவியெனவும் ஏனையவற்றிகும் காரணம் வருவித்து உரைக்கப்பட்டது’ என்பதனால் அறிவிக்கின்றார்.

மாறிக் கூட்டுதல்

இன்றியமையாத சில இடங்களில் மாறிக் கூட்டியுரைத்தல் இவர் இயல்பு. அங்ஙனம் கூட்டும்பொழுது அதனைத் தனியே எடுத்துக் கூறுவதோடு சில இடங்களில் அதற்குரிய காரணத்தையும் உணர்த்துவர்:-

“வார்கோற், செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்” (36) என்ற விடத்து, ‘செறிந்த உள்ளிடுபருக்கையையுடைய சிலம்பினையும் நீண்டகோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய வளையையுமுடைய மகளிர்’ என்று மாறிக்கூட்டி உரைகூறி அங்ஙனம் கூறியதை விசேடவுரையில், ‘வார்கோற் குறுந்தொடியென மாறியுரைக்கப்பட்டது’ என்று அறிவித்தனர். ‘உணவின் பிண்டம் உண்டிமுதற் றாதலான், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரென மாறிக்கூட்டுக’ (18) எனவும், ‘சுரம்பல கடந்து புள்ளிற்போகியென மாறிக்கூட்டுக’ (47) எனவும் வேறுபல இடங்களிற் கூறுதலும் காண்க.

பழஞ்செய்யுட்பகுதியை உரைநடையாக உரைத்தல்

இவர் பழையநூல்களிலுள்ள செய்யுட்பகுதிகளை இடையிட்டு எழுதுவர்:-

“நிற்றிறஞ் சிறக்க” (6) என்பதற்கு, ‘படை குடி முதலாகிய கூறுபாடுகள் சி்றக்க’ என்று உரையெழுதியிருத்தல், படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும், உடையா னரசரு ளேறு” என்னும் திருக்குறளின் நினைவிலிருந்தெழுந்தமை காண்க. “பல்கதிர்ச் செல்வன்” (34) என்னும் தொடருக்கு, ‘வாழ்நாட்கு அலகாகிய பலகதிரையுடைய செல்வன்’ என்று இவர் உரைத்த உரையில், “வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம்” என்னும் நாலடிச் செய்யுட்பகுதி அமைந்திருக்கின்றது, “புரவலர்” (69) என்ற சொல்லுக்கு, ‘ஈத்தளிப்போர்’ என்று உரைகூறினர்; இவ்வுரை, “இன்சொலா லீத்தளிக்க வல்லாற்கு” என்னும் குறளை அடியொற்றியது. “கவிழ்ந்தமண்டை” (13) என்ற தொடருக்கு ‘ஏலாது கவிழ்ந்த என் மண்டை’ என்று உரை எழுதுகையில், புறநானூற்றிலுள்ள வேறொரு செய்யுளின் அடியாகிய “ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை” (179) என்பது நினைவிலிருந்த தென்றே தோற்றுகின்றது. “உழுத நோன்பக டழிதின் றாங்கு” (125) என்னும் உவமையை விளக்கி, “தாளாற்றலாற் செய்தபொருளில் நல்லனவெல்லாம் பரிசிலர்க்கு வழங்கி எஞ்சியது உண்டலான் அழி தின்றாங்கென்றார்’ என்றெழுதிய உரையில் “தாளாற்றித்தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” என்னும் குறளின் சொல்லும் பொருளும் அமைந்திருக்கின்றன.