பக்கம் எண் :

681

சொன்னடை

இவர் செயவென்னும் எச்சத்திற்குப் பொருள் கூறும்பொழுது பரிசு என்னும் சொல்லைக் கூட்டி யுரைப்பர்; இதனை, ‘தீப்பிறக்கும் பரிசு முறுகி’ (37) , ‘மாளும்பரிசு......சொல்லும்’ (41) , ‘கைவிடும் பரிசு.......மாறிய’ (52) , ‘தூங்கும்பரிசு தூக்கி, (103) , ‘கொள்ளா வாம்பரிசு’ (116) , ‘மூழ்கும்பரிசு குளிர’ (160) முதலியவற்றால் அறியலாம்.

1‘வைத்து’ என்னும்சொல் இவரது உரைநடையில் இடையிடையே வரும்;- “எம்முளும்” (87) என்பதன் உரையில், ‘எங்களுள் வைத்தும்’ என்றும், வேறோரிடத்தில் (106) ‘அவை இரண்டினும் வைத்து எண்ணப்படாத’ என்றும் இச்சொல்லைச் சொன்னடையாக அமைத்திருத்தலைக் காணலாம்.

பொழிப்புரையின் பின்னர் விசேடவுரையில் முன்னர்க்கூறிய உரையையன்றி வேறுசில உரைகளையும் கூறி ‘எனினும் அமையும்’ என்று முடிப்பர். பிறர்கூறும் உரைகளையும் எடுத்துக்கூறுவர். பாடபேதங்களைக் காட்டிச் சில இடங்களில் அவற்றிற்கும் உரைகூறுவர். வினை முடிவுகாட்டு வதும், சிலசில தொடர்களுக்குப் பதசாரம் கூறுவதும், இலக்கணம் உரைப்பதும், துறைப்பொருத்தம் உணர்த்துவதும் இவர் இயல்பு. இரண்டு வகையாகத் துறைகூறுமிடங்களில் அவ்விரண்டிற்கும் செய்யுட்பொருளோடு பொருத்திக் காட்டுவதுண்டு. சில இடங்களில் துறைப்பொருத்தம் காட்டாமற் செல்லுவதும் உண்டு.

மாறுபாடு நீக்கல்

செய்யுளிற் கூறப்பட்ட பொருள் சிலவகைகளில் மாறுபாடாகத் தோற்றுவதற்கு இடமிருப்பின் அம்மாறுபாடுநீங்க, இன்னகாரணத்தால் இங்ஙனம் கூறப்பட்டதென்று தெளிவுறுத்துவது இவர் இயல்பு;-

இரண்டாவது பாட்டில் போற்றார்ப்பொறுத்தல் முதலியவற்றிற்கு உவமையாக ஐம்பெரும்பூதங்கள் கூறப்படுகையில் அவை நிலன், விசும்பு, வளி, தீ, நீர் என்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அம்முறை ஐம்பூதங்களின் தோற்ற முறையாகவேனும், ஒடுக்க முறையாக வேனும் இல்லை. இம்மாறுபாட்டை இவர், ‘போற்றார்ப்பொறுத்தல் முதலாகிய குணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின் பூதங்களின் அடைவு கூறாராயினார்’ என்று தெளியவைக்கின்றார். “ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்” என்றவிடத்து உயர்ந்த தலைவனுக்கு இழிந்த பகட்டை உவமை கூறுவது குற்றமாகுமோ என்னும்


1. பரிமேலழகரது உரைநடையிலும் இது காணப்படும்.