திட்டவேலென்ற கருத்து: படைக்கலமில்லாதாரை ஏதஞ்செய்வாரில்லை யாதலின், தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப்பட்ட வேலென்பதாம்’ (130) , ‘மண்டை அகலம் நோக்கி மலர்ந்தவென்ற கருத்து: கொடுக்கும் பொருள் மார்பின் வலியான் உளதாமாகலின், அகலம் நோக்கினவென்றதாகக் கொள்க’ (155) ; 36, 53, 74, 83, 97, 114, 123, 127, 131, 138, 139, 162, 186, 198, 201, 204, 266-ஆம் செய்யுட்களின் உரையையும் பார்க்க. சில இடங்களில் செய்யுட்களிற் சொற்கிடந்தவாறே பதவுரையிற் பொருள் கூறிவிட்டு இங்ஙனம் கூறினாரேனும் கருதியது இன்னதென்று தெளிவுறுத்துதல் இவர் உரைவகைகளில் ஒன்று:- எம்மு முள்ளுமோ முதுவா யிரவல, அமர்மேம் படூஉங் காலைநின், புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே” (48) என்ற செய்யுட்பகுதியைப் பற்றிய விசேட உரையில், ‘கண்டனமென எம்முமுள்ளென்றாரேனும், உள்ளிக்கண்டனமெனச்சொல்லென்பது கருத்தாகக் கொள்க’ என்றுரைத்ததையும், “குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே” (58) என்றவிடத்துச் சொற்கிடந்தவாறே பொருளுரைத்தல் மாறுபாடாதலை நினைந்து, ‘குன்றுகெழு நாடென்றதாயினும், கருதியது பிறர் நாட்டுக்குன்றுகளென்றதாகக் கொள்க’ என்று அமைத்ததையும், வேறொரு செய்யுளில் (109) ‘நான்கு பயனுடைத்தென்றுவைத்து, நெல்விளையும் பழம் ஊழ்க்கும் கிழங்கு வீழ்க்கும் தேன்சொரியுமென்று அவற்றின் செய்கை தோன்றக் கூறினாரெனினும், கருதியது நெல்லும் பழனும் கிழங்கும் தேனுமாகக்கொள்க’ என்றுவரைந்ததையும், 206-ஆம் செய்யுளுரையில் ‘காட்டகமென்றாரேனும் கருதியது அதன்கண் மரமாகக் கொள்க’ என்று உரைத்ததையும் காண்க. நினைவுரைத்தல் இங்ஙனமே, இவ்வாறு கூறியது இன்னநினைவுபற்றி யென்றெழுதுவது இவருரைத்திறங்களில் ஒன்று:- அன்னச்சேவலைக் கோப்பெருஞ்சோழன்பால் தூதுவிடும் பிசிராந்தையார் செய்யுளில் (67) அவ்வன்னத்தைப் பார்த்து “நின், இன்புறு பேடை யணியத்தன், நன்புறு நன்கல நல்குவ னினக்கே” என்ற பகுதியைப் பற்றிய விசேட வுரையில், ‘பேடையணி நன்கலம் நல்குவனென்ற தனாற் பயன்: மறவாது போதல்வேண்டுமென்னும் நினைவாயிற்று’ என்பர். சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியைப் பாடிய நக்கண்ணையார் பாட்டில், ‘உமணர்வெரூஉம் துறையன்னனென்றதனாற்பயன் வருத்துங்கூற்றின் ஆடவரையும் மகளிரையும் ஒக்கவருத்துவதல்லது அருளுமாறு கற்றி லனோவென்னும் நினைவிற்று’ (84) என்பர். ’வன்பரணர் பாடிய பரிசில் விடைத்துறைச் செய்யுளுரையில் (152) , ‘பாடுவல்விறலியோர் வண்ணமென்றது நீயும் ஒன்று பாடுவாயாக வென்னும் நினைவிற்று’ என்பர். மூவனென்பான் பரிசில் கொடுக்க நீட்டித்த காலத்துப் பெருந்தலைச் சாத்தனார் கூறிய
|