செய்யுளின் (209) உரையில், ‘நம்முட் குறுநணி காண்குவதாகவென்றது: நீ என் மாட்டுச் செய்த அன்பின்மையை அவ்விருக்கையன்றிப் பிறர் அறியாதொழி வாராக வென்னும் நினைவிற்று’ என்பர். வெளிமான் இறந்ததையறிந்து பெருஞ்சித்திரனார் வருந்திக் கூறியசெய்யுளில், “அவல மறுசுழி மறுகலிற், றவலே நன்றுமற்றகுதியுமதுவே” (238) என்றதுகண்டு, ‘யான் அது செய்யப் பெற்றிலேனென்னும் நினைவிற்று’ என்றுரைத்தார். இங்ஙனம் உரைகூறுதல் ஆசிரியர்களுடைய உள்ளக்கருத்தை உள்ளியறிந்து உரைக்கும் இவரது ஆற்றலைப் புலப்படுத்துகின்றது. பயனுரைத்தல் இது கருத்தென்றும், இது நினைவென்றும் கூறுவதுபோலவே இது பயனென்று சில இடங்களில் இவர் உரைவகுப்பார்:- சோழன் நளங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவ்வரசனுக்கு, “வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருளவல்லையாகுமதி“ (27) என்று அறிவுறுத்திவிட்டு, “அருளிலர், கொடாமை வல்ல ராகுக, கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே” என்று கூறுகின்றார். ‘பகைவர் கொடாமை வல்லராதலினால் இவனுக்கு என்ன பயன்? என்ற வினாவெழுங்கால் அதற்கு உரிய விடை எளிதிற்றோற்றுவதில்லை. இவ்வினாவை இவ்வுரையாசிரியர், ‘அருளிலர்கொடாமை வல்ல ராகுகவென்றதனாற் பயன், 1அவையுடையோர் தத்தம் பகைவரை வெல்வராதலால், பகையெதிர்ந்தோர் அவை இலராகவென்பதாம்’ என்று விடுத்தார். “விரைவளர் கூந்தல் வரைவளி யுளர” (134) என்பதற்குப் பயன், ‘பிறிதொன்றால் இடையூறில்லை யென்பதாம்.’ என்றார். பெறப்பட்டவை கூறுதல் கூறப்பட்ட செய்திகளைகொண்டு இவற்றால் இன்னவை பெறப்பட்டன என்று வேறு சிலவற்றைக் கூறுவர்:- ‘சென்றமர் கடத்தல் யாவதென்றதனாலும் வாள்போழ்ந்தடக்கலும் உய்ந்தனரென்றதனாலும் வந்தோர் பட்டமை விளங்கும்’ (93) ; ‘சந்தனப் புகை வேங்கைமிசைத்தவழும் பறம்பெனவே, இவை யொழிய மரமின்மையும், பகைவர் சுடும் புகையின்மையும் கூறியவாறாயிற்று’ (108) ; ‘பெண்டிரும் தம்பதங் கொடுக்குமெனவே ஆடவரும் தம்தரத்தே களிறு கொடுத்தல் போந்தது’ (151) ; ‘விடர்ப்புலி பொறித்த கோட்டை யென்றதனால், சோழனொடு தொடர்புபட்டு அவனுக்குத் துப்பாதல் தோன்றி நின்றது’ (174) ; யானே பரிசில னென்பதனால் நினக்கு என் குறை முடிக்கவேண்டுமென்பதூஉம், அந்தணனென்றதனால் யான் தருதற் குரியேனென்பதூஉம் கொள்ளப்படும்’ (200) ; ‘பெருங்கட லுண்ணாராகுப நீர்வேட்டோ ரென்பதனாற் செல்வரேயாயினும் வள்ளியோரல்லார்பாற் செல்லேனென்பதும், உண்ணீர் மருங்கின் அதர் பல வாகுமென்பதனால் நீ வள்ளியையாகலின் நின்பால் வந்தேனென்பதும் கொள்ளப்படும்’ (204) என்பவற்றால் இதனை அறியலாகும். 1. அருளும் கொடையும்.
|